×

உள்ளாட்சி தேர்தலுக்கு விண்ணப்ப மனு பெற ஒன்றிய அலுவலகங்களில் குவியும் கட்சியினர்

திருவள்ளூர், டிச. 11: உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினம் துவங்கிய நிலையில், விண்ணப்ப மனு வாங்க ஏராளமானோர் ஒன்றிய அலுவலகங்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில்  2 கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 4,725 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.  மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் காலை துவங்கியது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் விண்ணப்ப படிவம் வழங்கப்படுகிறது.  இதை வாங்குவதற்காக 14 ஒன்றிய அலுவலகங்களிலும், வேட்பாளர்கள் வந்தவண்ணம் உள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 16ம் தேதி கடைசி நாளாகும். மறு நாள் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்களுடன் 2 பேர் மட்டுமே அலுலவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், அந்த ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில், வேட்பாளர் பெயர் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புழல்: உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் 9ம் தேதி தொடங்கியது.  இந்நிலையில் 2ம் நாளாக நேற்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.  இதில்  தீர்த்தக்கரையாம்பட்டு ஊராட்சி தலைவர் பதவிக்கு உஷா அண்ணாதுரை மற்றும் அவரது மகள் அனிதா விமல் ஆகியோர் புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  இதேபோல் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 39 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் மற்றும் 20 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மட்டும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2 நாட்களில் 318 பேர் வேட்பு மனு தாக்கல்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினம் 9ம் தேதி தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம், 4,725 பதவிகளுக்கு 179 பேர் மனுதாக்கல் செய்தனர். இரண்டாவது நாளான நேற்று  139 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 2 பேரும், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 14 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 123 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.  வேட்பு மனு தாக்கல் தொடங்கி 2 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 4,725 பதவிகளுக்கு இதுவரை 318 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

ஊத்துகோட்டை: பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஒன்றிய கவுன்சிலர், 53 ஊராட்சி தலைவர், 369  வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற 30ம் தேதி 2ம் கட்டமாக நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 9ம் தேதி  தொடங்கியது. இதில் முதல் நாளான நேற்று முன்தினம் ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் படிவத்தை குறைந்த அளவுள்ளவர்களே பெற்றுச்சென்றனர். இதனால் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் 2-வது நாளான நேற்று  பெரியபாளையம் அருகேவுள்ள ஏனம்பாக்கம்  ஊராட்சி தலைவர் பதவிக்கு சம்பத்  மற்றும் கோடுவள்ளி ஊராட்சிக்கு லட்சுமி ஆகிய 2 பேர்  மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர். வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Parties ,union offices ,elections ,
× RELATED சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா...