திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை கிருத்திகை விழா கோலாகலம்

திருத்தணி, டிச. 11: திருத்தணி முருகன் கோயிலில் நேற்று நடந்த கார்த்திகை மாத கிருத்திகை விழா மற்றும் மகா தீபத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை வழிப்பட்டனர்.  திருத்தணி முருகன் மலைக் கோயிலில் நேற்று கார்த்திகை மாத கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர் விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.  மாலை 6 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கோயில் நுழைவாயில் முன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது, அங்கு வைக்கப்பட்ட சொக்கப்பனையில் நெய் தீபம் ஏற்றப்பட்டது.

அதே நேரத்தில் கோயிலின் எதிரில் உள்ள பச்சரிசி மலையில் பெரிய அகல் விளக்கில் 150 கிலோ நெய், இரண்டரை அடி கனம், 25மீட்டர் நீளமுள்ள திரியில், மகா தீபம் ஏற்றப்பட்டது.  அப்போது மலைக் கோயிலில் ஆந்திரா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, “அரோகரா, அரோகரா’’ என பக்தி முழக்கமிட்டனர். இந்த தீபத்தை பார்த்த பின் திருத்தணி நகரம் முழுவதும் வீடுகள் மற்றும் கடைகளில், நெய் தீபம் ஏற்றி பொதுமக்கள் வழிபட்டனர். இரவு 7.30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில், வள்ளி, தெய்வானையுடன் உற்சவ பெருமான் மாட வீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனிக்குமார் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: