×

பெரும்புதூர் அருகே 100 நாள் பணியை தடுத்து நிறுத்திய அதிமுக பிரமுகர்

பெரும்புதூர், டிச.11: பெரும்புதூர் அருகே 100 நாள் பணியை தடுத்து நிறுத்திய அதிமுக பிரமுகர் மீது, ஊழியர்கள் போலீசில் புகார் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும்புதூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் உள்ள கொளத்தூர், மேட்டுக் கொளத்தூர், நாவலூர், வெள்ளாரை, கேகே நகர் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கொளத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம் மூலம் ஏரி, குளம், குட்டை, தெருக்கள், சாலைகள், கோயில் வளாகங்கள் சீரமைக்கப்படுகின்றன.தற்போது மாவட்டம் முழுவதும் ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்டு, மரக்கன்றுகள் நட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதையொட்டி, தற்போது கொளத்தூர் ஊராட்சிக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, 100 நாள் வேலை ஊழியர்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியது.

இதைதொடர்ந்து, கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த 80 ஊழியர்கள், அதே பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோயில் வளாகத்தை சுற்றி உள்ள முட்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது கொளத்தூர் ஊராட்சி அதிமுக செயலாளர் சிவா, தனது ஆதரவாளர்களுடன், அங்கு சென்று கோயிலை சுற்றியுள்ள நிலம் தனக்கு சொந்தமான இடம். அங்கு மரக்கன்று அமைக்க கூடாது என ஊழியர்களிடம் தகராறு செய்து, பணியை தடுத்து நிறுத்தினார்.மேலும் 100 வேலை ஊழியர்கள் மீது பெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த 60 பெண் ஊழியர்கள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் பெரும்புதூர் காவல் நிலையம் சென்றனர்.  பின்னர் வேலையை தடுத்து நிறுத்திய ஊராட்சி செயலாளர் சிவா மீது புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், கொளத்தூர் கிராமத்தில் சாலையை ஒட்டி கருமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை சுற்றி முட்புதர்கள் காடுபோல் வளர்ந்துள்ளன. இதனால் அதனை அகற்றி மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டோம்.
அப்போது கொளத்தூர் ஊராட்சி அதிமுகசெயலாளர் சிவா, தனது மற்றும் அவரது ஆதரவாளர்கள், கோயிலை சுற்றியுள்ள நிலம் தனக்கு சொந்தமானது. அதை சீரமைக்க கூடாது. மீறினால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது என ஊழியர்களை தரக்குறைவாகவும் மிரட்டல் தோணியில் பேசினார். மேலும், எங்கள் மீது பெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.இதனால் நாங்கள் ஒன்று சேர்ந்து, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மீட்க வேண்டும். ஊழியர்களை மிரட்டினார் என்றும் ஊராட்சி அதிமுக செயலாளர் சிவா மீது புகார் அளித்துள்ளோம் என்றனர்.

Tags : AIADMK ,Perumbudur ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...