×

கனமழையால் சாய்ந்து ஒரு வாரமாகியும் அகற்றப்படாத மின்கம்பம்

உத்திரமேரூர், டிச. 11: கனமழையால் சாய்ந்து ஒரு வாரமாகியும் அகற்றப்படாத மின்கம்பத்தால், பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். உத்திரமேரூர் அருகே காக்கநல்லூர் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். உத்திரமேரூரில் இருந்து காக்கநல்லூர் கிராமத்துக்கு சுமார் 4 கிமீ தூரம் கொண்ட தார்ச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையோரம் ஆங்காங்கே கம்பம் அமைத்து, தெரு விளக்குகள் உள்ளன.இச்சாலை வழியாக பஸ் சேவை இல்லை. இதனால், கிராம மக்கள் இந்த சாலை வழியாக கிராமத்துக்கு நடந்து செல்கின்றனர். மேலும், இந்த சாலையை விவசாயிகள், தங்கள் விவசாய நிலத்திற்கு செல்லவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழையில் இந்த சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த ஒரு மின்கம்பம், அங்குள்ள கால்வாயின் குறுக்கே விழுந்தது. அந்த கம்பத்தில் இருந்த வயர்கள், துண்டாகி ஆங்காங்கே தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இதையொட்டி, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சாலையே இருளில் மூழ்கியுள்ளது.

மேற்கண்ட மின்கம்பம் விழுந்த இடத்தில் மழைநீர் கால்வாய் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளதால், மின்கசிவு ஏற்பட்டால் பெறும் மின் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.  மேலும் சாலை முழுவதும் இருளில் மூழ்கி உள்ளதால் கிராம மக்கள் சாலையை அச்சத்துடனே நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த கம்பம் விழுந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருவாரமாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், சம்மந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இந்த சாலையோரத்தில் கால்வாயின் குறுக்கே விழுந்துள்ள கம்பத்தை அகற்றி, புதிய கம்பம் அமைக்க வேண்டும். சாலை முழுவதும் உள்ள மின் விளக்குகளை சரி செய்துதர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED மழை பெய்தும் நிரம்பாமல் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்