×

பகுதிநேர ரேஷன் கடை கோரி உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு தாய்விளை கிராம மக்கள் முடிவு

உடன்குடி,  டிச. 11: மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள எழுவறைமுக்கி  ஊராட்சிக்கு உட்பட்டது தாய்விளை கிராமம். இங்கு வசித்து வரும் மக்களில் பெரும்பாலானோர்  விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கான குடிமைப்பொருட்களை சுமார் 5 கி.மீ. தொலைவில் தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ரேஷன் கடைக்குத்தான் சென்று வாங்கவேண்டியுள்ளது. இதனால் வெயில், மழை காலங்களில் கடும் இன்னலுக்கு ஆளாகும் மக்கள், போக்குவரத்திற்கு பணத்தையும், நேரத்தையும் விரயமாக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.  இதையடுத்து தாய்விலை கிராமத்திலேயே தங்களுக்கு பகுதிநேர ரேஷன் கடை அமைத்து தருமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் 10ம்தேதி அப்பகுதி மக்கள் சாலை மறியலில்  ஈடுபட்டனர். அப்போது  அங்கு வந்து சமரசப்படுத்திய அதிகாரிகள், பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்படும் என  உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட மக்கள், போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், அதன்பிறகும் அரசு  அதிகாரிகள், அளித்த வாக்குறுதியை செயல்படுத்த மறுத்தனர். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் அக்டோபர் 2ம்தேதி  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

ஆனால், அதன்பிறகும் பகுதி நேர ரேஷன் கடை  அமைக்கப்படாததால் தங்களது ரேஷன் கார்டுகளை  திருச்செந்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இருப்பினும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகின்றனர். இதனால் பல மாதங்களாக இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்களை  வாங்காமல் தவிர்த்து வந்தனர். தாய்விளையில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்கப்படாததால் ஆவேசமடைந்த கிராம  மக்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்புடன் கூடிய பதாகைகளை ஊர் முகப்பில் வைத்துள்ளனர்.

Tags : election ,government ,ration shop ,
× RELATED தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு...