×

ஏ.எஸ்.பி. தலைமையில் எஸ்.ஓ.எஸ். செயலியை பதிவிறக்கம் செய்து மாணவிகளுக்கு ஒத்திகை 7 நிமிடத்தில் வந்த போலீசுக்கு பாராட்டு

நாகர்கோவில் :  நாகர்கோவிலில் ஏ.எஸ்.பி. தலைமையில் கல்லூரி மாணவிகளை எஸ்.ஓ.எஸ். செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்து ஒத்திகை பார்க்கப்பட்டது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து ெகால்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இளம்பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே இளம்பெண்கள், மாணவிகளின் பாதுகாப்புக்காக தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஸ்.ஓ.எஸ். என்ற செயலி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்படி குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் மத்தியில் இந்த எஸ்.ஓ.எஸ். செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது பள்ளி, கல்லூரிகளில் காவல்துறை சார்பில் இது தொடர்பான விளக்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில், நேற்று நடந்த மனித உரிமை பற்றிய கருத்தரங்கில் பங்கேற்ற ஏ.எஸ்.பி. ஜவகர், எஸ்.ஓ.எஸ். செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். ஆன்ட்ராய்டு மற்றும் ஐ போன்கள் வைத்திருந்த மாணவிகளை இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்தார். பின்னர் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய ஒத்திகையும் நடத்தப்பட்டது. மாணவி ஒருவர், தனது மொபைலில் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, கல்லூரி வளாகத்தில் இருந்தவாறு அந்த செயலியை இயக்கினார். சரியாக 7 வது நிமிடத்தில் எஸ்.ஐ. ஜோசப் பேசில் ராஜன் தலைமையிலான ரோந்து போலீசார் அங்கு வந்தனர். அப்போது ஏ.எஸ்.பி. ஜவகர் மற்றும் நீதிபதியை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது ஏ.எஸ்.பி. அவர்களிடம், ஒத்திகை பார்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. மிக விரைவாக வந்துள்ளீர்கள் என்றார். உடனடியாக மாணவிகளும் கை தட்டி போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர். போலீசார் வந்த சில நிமிடங்களில் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, சம்பந்தப்பட்ட போலீசாரை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி கேட்டனர். அவர்களிடமும் இந்த ஒத்திகை குறித்து தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய ஏ.எஸ்.பி. ஜவகர், செல்போன்களில் நல்ல பயன்பாடுகளும் உள்ளன. நாம் எப்படி அதை பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். இந்த செயலியை கண்டிப்பாக மாணவிகள், இளம்பெண்கள் பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளுங்கள். சகோதரிகள் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் கூறுங்கள். நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த செயலியில் உங்களுக்கு நெருக்கமானவர்களின் இரு மொபைல் எண்களையும் இணைத்துக் ெகாள்ளலாம். செயலியை நீங்கள் தொட்டதும், ஜிபிஎஸ் இயங்க தொடங்கி விடும். சென்னை கட்டுப்பாட்டு அறையுடன் உடனடியாக இணைப்பு கிடைக்கும். டவர் இல்லாத, நெட் இணைப்பு இல்லாத சமயங்களில் எமர்ஜென்சி நம்பராக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100ஐ தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Tags : SOS ,
× RELATED பெண்கள் பாதுகாப்பிற்கு காவலன்...