×

சின்னசேலம் ஏரிக்கு நீர்வர கால்வாய் தூர்வாரும் பணி

சின்னசேலம்: சின்னசேலம் நகரின் மையப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை காலத்தில் நீரை தேக்கி வைப்பதன் மூலம் சின்னசேலம் பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த ஏரி கடந்த 3 ஆண்டுகளாகவே கடும் மழை காலத்திலும் நிரம்பாமல் வறண்டு காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கோமுகி அணையிலிருந்து சின்னசேலம் ஏரிக்கு நீர்வரும் கால்வாய் தூர்ந்து புதர்மண்டி கிடப்பதுதான்.  அதாவது சின்னசேலம் ஏரிக்கு கோமுகி அணையில் இருந்து நீர் வரத்து உள்ளது. கடத்தூரில் இருந்து ஒரு பிரிவு கால்வாய் நல்லாத்தூர், குதிரைசந்தல், காரனூர் போன்ற கிராம ஏரிகளுக்கு செல்கிறது. மற்றொரு பிரிவு கால்வாய் தெங்கியாநத்தம், பைத்தந்துறை, தென்செட்டியந்தல், வி.பி.அகரம் வழியாக சின்னசேலம் ஏரிக்கு செல்கிறது. இந்த சின்னசேலம் ஏரிக்கு நீர் வரும் கால்வாய் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 கோடி மதிப்பில் பொக்லைன் மூலம் சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு பொதுப்பணித்துறையும், விவசாயிகளும் இந்த நீர்வரத்து கால்வாயை முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக நல்ல மழை பெய்தும் சின்னசேலம் ஏரியில் சொட்டு தண்ணீர்கூட இல்லை. அதுமட்டுமல்லாமல் கோமுகி அணை கால்வாயிலிருந்து கடத்தூர்வரை கால்வாய் பகுதி வன பகுதியில் வருகிறது.

இந்த கால்வாய் தூர்ந்துபோய் மிகவும் குறுகியும், மேடாகவும் உள்ளது. இதை சீரமைக்க வனத்துறை அனுமதி தர மறுக்கிறது.  இதனால் கால்வாய் இருந்தும் போதிய அளவு நீர்வரத்து இல்லாமல் தடைபடுகிறது. சின்னசேலம் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது சின்னசேலம் ஏரி ஆகும். இந்த ஏரிக்கு அணையில் இருந்து நீர்வரத்து இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாகவே சின்னசேலம் பகுதியில் கடும் குடிநீர் பிரச்னை இருந்து வந்துள்ளது. தற்போது 2வது முறையாக கோமுகி அணை நிரம்பி உள்ளது. உபரி நீரை கோமுகி ஆற்றில் திறந்துவிட்டுள்ளனர். தற்போது கடத்தூர் ஏரி, தெங்கியாநத்தம் ஏரிகள் நிரம்பி பைத்தந்துறை ஏரிக்கு நீர் செல்கிறது. இன்னும் ஓரிரு வாரத்தில் அந்த ஏரி நிரம்பி விடும். சின்னசேலம் ஏரிக்கு நீர்வரத்து என்பது அணையில் இருந்து வரும் நீர் மற்றும் மயூரா நதியில் இருந்து வரும் நீர்தான். இந்த நீர் சேர்ந்தால்தான் சின்னசேலம் ஏரி நிரம்பி கோடி ஓடும். தற்போது போதிய அளவு மழையில்லாததால் ஆற்றில்  நீர்வரத்து என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் அணையில் இருந்து வரும் நீரை சின்ன சேலம் ஏரிக்கு வரவைப்பதன் மூலம் சின்னசேலம் பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையை ஓரளவு தீர்க்கலாம் என எண்ணிய சின்னசேலம் பகுதி சமூக ஆர்வலர்கள், பெருவணிக பிரமுகர்கள் இணையும் கைகள் என்ற அமைப்பை உருவாக்கி பைத்தந்துறை புதூர் ஏரி கால்வாயிலிருந்து சின்ன சேலம் ஏரிவரை உள்ள 15 கிலோமீட்ர் தூர பாசன கால்வாயை 5 பொக்லைன் மூலம் கடந்த 2 நாட்களாக சீரமைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வனபகுதியில் கால்வாயை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனுவும் கொடுத்துள்ளனர்.

Tags : Water Resources Canal ,Chinnasalem Lake ,
× RELATED சின்னசேலம் ஏரிக்கு கோமுகி அணை நீர் வர பொதுப்பணித்துறை நடவடிக்கை தேவை