×

நான்கு வழிச்சாலை திட்ட பணி நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

விழுப்புரம்:  தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக நில எடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட எல்லை பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் விக்கிரவாண்டி - கும்பகோணம், புதுச்சேரி -கூனிமேடு, விழுப்புரம் - நாகை ஆகிய வழித்தடங்களில் நான்குவழிச்சாலைத்திட்டப்பணிகள் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து பணிகள் நடந்துவருகின்றன. இதனிடையே விக்கிரவாண்டி- கும்பகோணம் இடையே குறு, சிறு பாலங்கள், மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதை உள்ளிட்ட பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில் பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மந்தமாக உள்ளதால் முழுமைபெறாமல் இழுபறியில் உள்ளது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள் சாலைப்பணிகளை விரைந்து முடிக்காமல் உள்ளனர். குறிப்பாக விழுப்புரம் - நாகை இடையே நான்கு வழிச்சாலைத்திட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடு வழங்கியதில் பெறும் குளறுபடியும், காலமாதம் ஏற்பட்டதால் சாலை திட்டத்திற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் குறித்து விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரையா, நகாய் திட்ட இயக்குநர் சிவாஜி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில் மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், விழுப்புரம்- நாகப்பட்டினம், விக்கிரவாண்டி- கும்பகோணம், புதுச்சேரி-கூனிமேடு ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான நிலஎடுப்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு வலியுறுத்தினார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை