×

விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்: விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக சிதம்பரம் சுற்று வட்டார இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. லட்சக்கணக்கில் விலை போகும் நிலங்களை குறைந்த அளவில் பணம் ஒதுக்கீடு செய்து கையகப்படுத்தியதை கண்டித்தும், நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியும் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் பொறுப்பாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். துரைராஜன், பாலசுப்பிரமணியன், வீரமணி, காந்தி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமராட்சி முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் மாமல்லன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கடவாச்சேரி, சாலியன்தோப்பு, பிள்ளைமுத்தாபிள்ளைசாவடி, உசுப்பூர், வல்லம்படுகை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

அப்போது நிலத்திற்கான இழப்பீடு குறைவாக வழங்கியதைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் கற்பனைசெல்வம், செந்தில்குமார், பொன்னம்பலம், மூர்த்தி, முனுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.ஏற்கனவே நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகளின் காலதாமதத்தால் விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Demonstration ,Villupuram-Nagai National Highway ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்