குறிஞ்சிப்பாடி அருகே மளிகை கடையில் திடீர் தீ விபத்து

வடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலு என்கிற சண்முகம்(49). இவர் அக்கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நள்ளிரவு 12 மணி யளவில் கடை வழியாக அவரது உறவினர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது கடையில் இருந்து புகை வந்துள்ளது.இதையடுத்து சண்முகத்தை செல்போனில் தொடர்புகொண்டு, கடையில் புகைமூட்டம் வருவதாக தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து கடைக்கு வந்த சண்முகம், கடை தீப்பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது கடையை திறக்க முற்பட்டபோது, புகை மூட்டத்தால் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

உடனடியாக குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தீயணைப்பு துறையினர் வந்து தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த மளிகை பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளது. இது குறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் சண்முகம் புகார் அளித்தார். அதில், யாரோ மர்ம நபர்கள் கடைக்கு தீ வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>