×

மழையால் உளுந்து பயிர் சேதம்

பண்ருட்டி:  பண்ருட்டி அருகே காடாம்புலியூர், முத்தாண்டிகுப்பம், மேட்டுகுப்பம், நடுகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் முந்திரி தோப்புகள் உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஏராளமான முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன. அப்போது ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் ஏராளமானோர் ஊடு பயிராக உளுந்து பயிர் விதைத்து அதிகளவு அறுவடை செய்தனர். நல்ல விளைச்சல் ஏற்பட்டதால் தொடர்ந்து வருடாவருடம் ஊடு பயிராக உளுந்து பயிரிட்டு வருகின்றனர். நடப்பாண்டில் சுமார் 500 ஏக்கர் அளவில் உளுந்து விவசாயம் பயிர் செய்திருந்தனர்.

தற்போது சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் உளுந்து பயிரில் பூத்திருந்த பூக்கள் அழுகியது. மேலும் பனி பெய்வதால் சரியான வளர்ச்சி ஏற்படவில்லை. மேலும் பூச்சிகள் அதிகளவு ஏற்பட்டு உளுந்து பயிரை நாசம் செய்தன. இதையடுத்து விவசாயிகள் பூச்சி மருந்து அடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இது குறித்து கீழகுப்பம் கிராமத்தை சேர்ந்த கணேசன் கூறுகையில், எங்கள் பகுதியில் ஊடு பயிராக விதைத்த உளுந்து பயிர் சரியாக விளைந்து வந்த நிலையில் கனமழையால் பாதித்து சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு விவசாயிகளுக்கு பூச்சி மருந்துகளை இலவசமாக வழங்க வேண்டும். முழுவதும் சேதமான உளுந்து பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்றார்.

Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி