×

மூணாறு அருகே மாதிரி கிராம திட்டத்தில் முறைகேடு இடுக்கி கலெக்டரிடம் அறிக்கை தாக்கல்

மூணாறு, டிச.10: மூணாறு அருகே வட்டவடை பகுதியில் மாதிரி கிராமம் அமைக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக இடுக்கி மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூணாறு அருகே வட்டவடை பகுதி உள்ளது. இங்கு அதிகளவு விவசாயப்பணி நடக்கிறது. இங்கிருந்து  மூணாறு மற்றும் கேரளா மாநிலத்திற்கு விவசாய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இங்கு குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு வழங்கும் நோக்குடன் மாதிரி கிராம திட்டம் கடந்த வருடம் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு வழங்கும் இந்த திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தேவிகுளம் துணை கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் அறிக்கை தயார் செய்துள்ளார்.அதன்படி மாதிரி கிராம திட்டங்கள் நடைபெற்று வரும் இடம் வருவாய்துறைக்கு சொந்தமான இடம் என்றும் பஞ்சாயத்து தீர்மானித்த இடத்திற்கும் பணிகள் நடைபெறும் இடத்திற்கும் வேறுபாடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாதிரி கிராம பணிகளுக்கு ஒதுக்கப்படும் 80 லட்ச ரூபாயில் ரூ. 10 லட்சத்திற்கான வேலைகள் கூட இதுவரை நடிப்பெறவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 4 வீடுகள் வீதம் 27 கட்டிடங்கள் கட்டப்படுவது திட்டத்தின் நோக்கமாகும். தற்போது  மண்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், வீடுகள் கட்டப்படும் இடத்தில் 15மீட்டர் அளவில் மண் தோண்டி எடுக்கப்பட்டு வருவதால் வரும் மழைக்காலங்களில் இயற்கை பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக துணை கலெக்டர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை  இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷனிடம் தேவிகுளம் துணைகலெக்டர் பிரேம் கிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படியில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மாதிரி கிராமம் குறித்து  முழுமையாக விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இடுக்கி மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வட்டவடை பஞ்சாயத்து தலைவர் ராமராஜ் கூறுகையில், ``தேவிகுளம் துணை கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கை பொய்யானது. இவ்வாறு அறிக்கைகள் தயார் செய்து பிரபலம் அடைய அவர் நினைக்கிறார். மாதிரி கிராம திட்டத்தின் முறையான ஆவணங்களை அதிகாரிகளிடம் அளித்துள்ளது’’ என்று கூறினார்.

Tags : Collector of Irrigation Idukki ,Munnar ,Model Village Project ,
× RELATED மூணாறு அருகே துதிக்கையில் காயத்துடன் சுற்றித் திரியும் குட்டி யானை