×

இளையான்குடி பகுதியில் பல ஆண்டுகளாக பாசன மடைகள் சேதம்

இளையான்குடி, டிச. 10:  இளையான்குடி பகுதியில் பொதுப்பணித்துறை அலட்சியத்தால்,   பாசன மடைகள், கால்வாய்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகாவில் 55 ஊராட்சிகளில், 56 பெரிய கண்மாய்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் கொன்டுவர கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. கண்மாயிலிருந்து விவசாய நிலங்களுக்கு தேங்கிய தண்ணீரை கொன்டு செல்ல பாசன மடைகளும், நீண்ட வாய்க்கால்களும் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சீரமைக்காத வரத்துக் கால்வாய்களால் கருவேல மரங்கள் வளர்ந்து மண் திட்டு ஏற்பட்டு தூர்ந்து போயுள்ளது. மடைகள் அனைத்தும் துர்வாரப்படாததால் மண்மேடாக உள்ளது. பல பாசன மடைகள் இடிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. அதனால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறையினருக்கு புகார் அளித்தும், ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை என இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் கண்மாய்கள் மற்றும் பொதுப்பணித்துறை சம்பந்தமான புகார்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து புறக்கணிப்பதாக விவசாய சங்கங்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. கண்மாய்கள், பாசன மடைகள் சேதமடைவது நிர்வாக குளறுபடியா இல்லை, நிதி பற்றாகுறையா எனவும் விவசாயிகள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.  பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைக்கிராமம் கண்மாய், பாசன மடை சேதமடைந்து 10 ஆண்டுகளாகியும் இதுவரை சீரமைக்கவில்லை.

அதனால் அப்பகுதி விவசாயிகள் கண்மாயில் தேங்கிய நீரை விவசாய நிலங்களுக்கு கொன்டு செல்ல முடியாத நிலையில் உளள்னர். அதனால் அப்பகுதியில் சுமார் 70 ஏக்கர் நிலம் பாதிக்கப்படுவதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து பலமுறை பொதப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர். அதனால் சேதமடைந்த மடைகளை புதுப்பிக்கவும், தேவையான இடங்களில் மடைகள் கட்டவும்  மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயி மாணிக்கம் கூறியதாவது, ‘இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதியில் உள்ள வரத்துக்கால்வாய்களில் கருவேலமரங்களும், வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பின் பிடியிலும் உள்ளது. சாலைக்கிராமத்தில் தண்ணீர் செல்லும் பாசன மடை பல ஆண்டுகளாக  சேதமடைந்துள்ளது. இதனை பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்வதேயில்லை. பல விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் விவசாயம் கேளிவிக்குறியாகும் நிலை உள்ளது’ என்றார். விவசாயிகள் ஆலோசனைஒவ்வொரு கிராமத்திலும் கண்மாய் கமிட்டி பெயரில் பல லட்சம் ரூபாய் உள்ளது. ஆண்டு தோறும் கண்மாய்க்கு செலவு செய்யப்பட்டுள்ளதா, அல்லது வேறு பணிகளுக்கு செலவு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, அந்த பணத்தில் கண்மாய் மடைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம் என அப்பகுதி விவசாயிகள் ஆலோசனை தெரிவித்தனர்.

Tags : area ,Ilangudi ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...