×

உள்ளாட்சி தேர்தலுக்கு முதல்நாளில் 107 பேர் வேட்புமனு தாக்கல்

தர்மபுரி, டிச.10: தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு, முதல்நாளில் 107 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 16ம் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 19ம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2ம் தேதி நடக்கிறது. மாவட்ட ஒன்றிய குழு துணை தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் வரும் ஜனவரி 11ம் தேதி நடக்கிறது. கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் முடிந்த பின்னர், பிப்ரவரி மாதம் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் தேர்தல் நன்னநடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

 தர்மபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சியும், 10 பேரூராட்சிகளும், ஊராட்சி ஒன்றியம் 10ம், கிராம ஊராட்சிகள் 251 உள்ளன. தர்மபுரி நகராட்சியில் 33 உறுப்பினர்களும், 10 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து, 18 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவியும், 10 ஊராட்சி ஒன்றியங்களில் 188 வார்டு உறுப்பினர்கள் பதவியும், 10 பேரூராட்சிகளில் 159 வார்டுகளுக்கும், 251 கிராம ஊராட்சி வார்டுகளில் இருந்து 2,343 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, அரூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சி பொறுப்புகளுக்கு முதற்கட்டமாகவும், பென்னாகரம், ஏரியூர், காரிமங்கலம், மொரப்பூர், பாலக்கோடு ஆகிய ஒன்றியங்களில் 2ம் கட்டமாகவும் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில், வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு பெறப்பட்டது. ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 7 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 99 பேரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முதல்நாளில் மொத்தம் 107 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : body elections ,
× RELATED 2023ம் ஆண்டு மே.வங்க உள்ளாட்சித்...