×

ஆப்ரிக்கன் கெழுத்தி மீன் வளர்ப்பு குட்டைகள் அழிப்பு

கிருஷ்ணகிரி, டிச.10:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் வளர்க்கும் பண்ணை குட்டைகள் மற்றும் குளங்களை கண்டறிந்து, அவற்றின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மீன்களை அழிக்கவும் கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கிருஷ்ணகிரி தாசில்தார் ஜெய்சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி, மீன் வளத்துறை ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், கிருஷ்ணகிரி வட்டாரத்திற்குட்பட்ட பெத்ததாளப்பள்ளி மற்றும் பெல்லாரம்பள்ளி கிராமங்களில், தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெழுத்தி மீன்களை வளர்த்து வரும் பண்ணை குட்டைகள் மற்றும் குளங்களை கண்டறிந்து அழித்தனர். தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதேபோல்  தேன்கனிக்கோட்டை மீன் மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெழுத்தி மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், தேன்கனிக்கோட்டை தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் துயர்துடைப்பு தாசில்தார்  சரவணன், வருவாய் ஆய்வாளர் பபிதாபானு, கிராம நிர்வாக அலுவலர் மாதையன் ஆகியோர் நேற்று தேன்கனிக்கோட்டை மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெழுத்தி மீன்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து 35 கிலோ ஆப்ரிக்கன் கெழுத்தி மீன்களை, வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.  மேலும், அந்த மீன்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என விசாரணை நடத்தினர். அதில், ஓசூரிலிருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பின்னர், தடை செய்யப்பட்ட மீன்களை விற்பனை செய்தால், போலீசில் புகார் செய்து குற்றவழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : African ,
× RELATED 15 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற மாஜி...