பள்ளிகளில் இரு வேளையும் மாணவர்களுக்கு உடல்பயிற்சி அளிக்க உத்தரவு

ஈரோடு, டிச. 10: பள்ளிகளில் காலை வழிபாட்டு முன்பும், மாலையிலும் மாணவர்களுக்கு உடல் சார்ந்த பயிற்சி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகரம் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளி அளவில் மாணவ, மாணவியரின் பாடச்சுமையை குறைத்து அவர்களை உடற்தகுதியுடனும், ஆரோக்கியத்துடன் மன அளவில் தனித்திறனுடம் தயார்படுத்துவதற்கு பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டுவருவது அவசியமாகிறது. உடல் சார்ந்த பயிற்சிகளின் மூலம் உடற்தகுதி மேம்படுவதால், கற்றலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் அரசு, நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது ஒரு வகுப்புக்கு வாரத்திற்கு இரு பாட வேளைகள் மட்டுமே உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உடல் சார்ந்த பயிற்சிகளில் குறிப்பாக நடனம், யோகா போன்ற உடல் சார்ந்த பயிற்சிகளை உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்.

உடற்கல்வி ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் பணியாற்றும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு மேற்கொள்ள வேண்டும். இப்பயிற்சிகள் காலையில் பள்ளி வழிபாட்டு கூட்டத்திற்கு முன்பாக 15 நிமிடமும், மாலையில் 45 நிமிடமும் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>