×

கொல்லங்கோடு அருகே அனுமதியில்லாத பார் முன் போதை ஆசாமிகள் மோதல் 4 பேர் மீது வழக்கு

நித்திரவிளை, டிச. 10:  கொல்லங்கோடு அருகே நடைக்காவு பகுதியில் அரசின் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் அனுமதி பெற்ற பார் ஒன்றும், கடையிலிருந்து சுமார் 25 மீட்டர் தொலைவில் அனுமதியில்லாமல்   ஒரு பாரும் செயல்படுகிறது. இதில் அனுமதியின்றி செயல்படும் பாரை மூட நடைக்காவு ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றி அதை புகாராக டாஸ்மாக் நிர்வாகத்திடம் தெரிவித்த பிறகும் அனுமதியில்லாமல் இயங்கும் பாரை பூட்ட டாஸ்மாக் நிர்வாகம் மறுத்து விட்டது. இதனால் அந்த பார் தற்போது திறந்து செயல்படுகிறது.
 இந்த பாரில் சட்டத்திற்கு புறம்பாக பல வித சைடீஷ் உள்ளதால்   பல்வேறு பகுதிகளில் இருந்தும் மது வாங்கி வந்து குடிமகன்கள் தினமும் இந்த பாரில் மது அருந்தி விட்டு  செல்வார்கள். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பாரில் காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் இரவு 9:30 மணியளவில்  இந்த பாரில் இருந்து மது அருந்தி கொண்டிருந்த  குடிமகன்கள் போதை தலைக்கு ஏறியதும், பாரிலிருந்து வெளியே வந்து இரு பிரிவாக பிரிந்து  மோதிக்கொண்டனர்.  இதையடுத்து உடனடியாக பார் கேட் மூடப்பட்டது. தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு கொல்லங்கோடு போலீசார் வந்தனர்

போலீசாரை பார்த்ததும் இரு கோஷ்டிகளையும் சேர்ந்த சிலர் தப்பி ஓடினர். உஷாரான போலீசார் மோதலில் ஈடுபட்ட இரு கோஷ்டிகளையும் சேர்ந்த 4 பேரை மடக்கி பிடித்தனர், இவர்கள் கொண்டு வந்த 3 இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு கோஷ்டியை சேர்ந்த 2 பேர் ராணுவ வீரர்கள் என்பதும், மற்ற 2 பேரும் ஒரு பைனான்ஸ் கம்பெனியில் பணி புரிபவர்கள் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கொல்லங்கோடு எஸ்.ஐ ஜெயக்குமார் கொடுத்த புகாரின்பேரில், வாவறை பாறப்பாட்டு விளையை சேர்ந்த ஷாஜி(33), ஸ்டாலின்(21), கிராத்தூர் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் ராஜ்(29), ஷாஜி(30) ஆகிய 4 பேர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Kollam ,
× RELATED மார்க்சிஸ்ட் மீது பொய் புகார் கொல்லம்...