திருவேற்காடு அருகே குழந்தையுடன் இளம்பெண் தர்ணா

பூந்தமல்லி, டிச. 10: சென்னை ஆவடியை சேர்ந்தவர் மஞ்சு (32). இவருக்கும் வட மாநிலத்தை சேர்ந்த அரிபிரசாத்(34) என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு  ரக்சன்(2), என்ற மகன் உள்ளார். அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மஞ்சு, திருவேற்காடு அம்மன் நகர், 3வது குறுக்கு தெருவில்  தனது கணவர் வீடு இருக்கும் தெருவில் உள்ள ஆட்டோவில்  மகனுடன் தங்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.  இதுகுறித்து அவர் கூறுகையில்,  ‘’தனியார் திருமண தகவல் மையம் மூலம் எனக்கும் அரிபிரசாத்துக்கும் திருமணம் நடைபெற்றது. வட மாநிலத்தைச் சேர்ந்த எனது கணவருடன் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. தற்போது அவரது தாய் பேச்சை கேட்டு என்னை  துன்புறுத்தி வந்தார். மேலும் என்னை பிடிக்கவில்லை என்று கூறி விட்டு அவரது தாயுடன் வசித்து வருகிறார். மேலும் தன்னை விவாகரத்து செய்யப் போவதாக கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க கோரி இங்கு வந்த போது தன்னை வீட்டில் சேர்க்கவில்லை. இதனால் தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று வீட்டின் தெருவில் உள்ள ஒரு ஆட்டோவில் கடந்த சில தினங்களாக எனது மகனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தாலும் போலீசார் புகாரை ஏற்க வில்லை. இங்குள்ள வீட்டை இன்னும் 2 மாதங்களில் காலி செய்ய முடிவு செய்து உள்ளனர். இவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கு செல்வார்கள் என தெரியாது. எனவே தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>