மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடக்காததால் மக்கள் ஏமாற்றம்

திருவள்ளூர், டிச. 10: தமிழகத்தில் உள்ளாட்சி பிரநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது.  அதைத்தொடர்ந்து தேர்தல் அறிவிப்பு வெளியானது. சிலகாரணங்களால் தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதில், ஊரக பகுதிகளில் உள்ள பதவிகளுக்கு மட்டும் வரும் 27 மற்றும் 30ம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை ஜனவரி 2 ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள், கிராமத்தில் தனக்கான செல்வாக்கு மற்றும் பலத்தை நிரூபிக்கும் எண்ணத்தோடு ஒவ்வொருவரும் போட்டி போட்டு தீவிரமாக தேர்தல் பணியாற்றுவர்.

இதனால், உள்ளாட்சி தேர்தல் என்றாலே எப்போதும் கிராமப் புறங்கள் களைகட்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை பெரும் எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருந்தனர். அதற்கேற்ப, பண்டிகை நாட்களுக்கு முன்பாக ஊரக பகுதிக்கான உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு, கிராமப்புற பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை தின நாட்கள் நெருங்கும் நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், பொது மக்களிடையே பணம் புழக்கம் ஏற்படுவதற்கான சூழலும் நிலவி உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு துறை அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் மட்டும் தேர்தல் இல்லை. இதனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வசிக்கும் மக்கள் உற்சாகமின்றி களையிழந்து காணப்படுகின்றனர்.

Related Stories:

>