×

கும்மிடிப்பூண்டியில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மகளிர் பள்ளி

கும்மிடிப்பூண்டி, டிச. 10: கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கழிவறை, சுத்தமான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் எதிரே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை  ஆத்துப்பக்கம், வழுதலம்பேடு, குருவி அகரம், பள்ளிபாளையம், மங்காவரம், மேலகழனி, அயநெல்லுர், குருவாட்டுச்சேரி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தொண்டு நிறுவனம் சார்பில் கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு விதமான வசதிகளை செய்து கொடுத்துள்ளது. ஆனால் அரசுப்பள்ளி நிர்வாகம் கழிப்பறைகளை சுத்தம் செய்யாமல்  விட்டதால் துர்நாற்றம் வீசுகிறது.

அதை பயன்படுத்தும் மாணவிகள் பல்வேறு விதமான தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். அத்தோடு இரண்டு பள்ளிக்கட்டிடங்களில் சுமார் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆர்ஓ சிஸ்டம் வைத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்பட்டது.  இதுவும் பராமரிப்பு இல்லாததால் வருடத்துக்கு மேலாக பயனற்று கிடக்கிறது. இதனால் மாணவிகள் பள்ளியை விட்டு வௌியில் சென்றுதான் தண்ணீர் குடிக்கின்றனர். இதனால் பெற்றோர்கள், தங்களது மகள்களை கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். பள்ளிக்கு வரும்  மாணவிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எனவே மாவட்ட கலெக்டர், இப்பள்ளியில் ஆய்வு செய்து மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government Girls' School ,facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...