சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து தம்பதி பரிதாப பலி

திருக்கழுக்குன்றம், டிச. 10: கல்பாக்கம் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார் சேற்றில் சிக்கியதால்,  சென்னையை சேர்ந்த கணவன், மனைவி பரிதாபமாக பலியாகினர். சென்னை கோபாலபுரத்தை சேர்ந்தவர் அப்துல்வகாப் (48). இவரது மனைவி கஜிதாவகாப் (45). இவர்களது மகன் முகமது சகில் (18). கடந்த 2 நாட்களுக்கு முன் அப்துல் வகாப் குடும்பத்தினர், மற்றும் உறவினர்கள் சம்ரின் பாத்திமா (15), அனிஷா (21), பர்கணா (5) ஆகியோர் காரைக்காலில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை அப்துல் வகாப் ஓட்டினார். கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஈசிஆர் சாலையில் நேற்று அதிகாலை கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாக ஓடி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் மழைநீருடன் சேறும் கலந்து இருந்ததால் கார் சேற்றில் சிக்கியது. இதில், அப்துல் வகாப், அவரது மனைவி கஜிதா வகாப்பு ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். தகவலறிந்து சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி, பிரேத பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* பெண்ணிடம் நகை பறித்த 2 பேருக்கு தர்மஅடி செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில், பாரேரி ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்தவர் ஆலிஸ் (30). நேற்று இரவு ஆலிஸ், தனது மகளுடன் மாரக்ெகட்டுக்கு சென்று, காய்கறி வாங்கினார். பின்னர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், ஆலிஸ் கழுத்தில் இருந்த 6 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறி கூச்சலிட்டனர். அதை பார்த்த அப்பகுதி மக்கள், மர்மநபர்களை விரட்டி சென்று, மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த மணிவண்ணன் (24), உதயா (25). இவர்கள் பல காவல் நிலையங்களில் நகை பறிப்பு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதைடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர்.

* செல்போன் திருட்டு

திருப்போரூர்: திருப்போரூர் அய்யம்பேட்டை தெருவை சேர்ந்தவர் சுகுமார் (40). திருப்போரூர் பஸ் நிலையம் எதிரே செல்போன் விற்பனை மற்றும் சரிசெய்யும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை கடையின் உள்பக்கமாக சுகுமார், செல்போன் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார்.

மற்றொரு பக்கத்தில் 2 பெண் ஊழியர்கள், செல்போன் ரீசார்ஜ் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைக்கு அங்கு வந்த ஒரு வாலிபர், விலை உயர்ந்த செல்போனை விலைக்கு கேட்டார். பெண் ஊழியர் அதை கொடுத்து விட்டு, விலை விபரங்களை உரிமையாளரிடம் கேட்கும்படி கூறினார். பின்னர், அவர், வாடிக்கையாளர்களிடம் ரீசார்ஜ் செய்யும் பணியை தொடர்ந்தார். அந்த நேரத்தில் கடையில் கூட்டமாக இருந்ததால், அந்த செல்போனுடன், வாலிபர் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து பெண் ஊழியர் செல்போன் வாங்கிய வாலிபர் குறித்து உரிமையாளரிடம் கேட்டபோது அவர் செல்போனுடன் டிமிக்கி கொடுத்தது தெரிந்தது. புகாரின்படி திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

* காஸ் லாரி கவிழ்ந்து விபத்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த நடராஜபுரத்தில் தனியார் காஸ் கம்பெனி இயங்குகிறது. இங்கிருந்து சென்னை மூலக்கடைக்கு 6 டன் எடையுள்ள எரிவாயு நிரப்பப்பட்டு டேங்கர் லாரியில் நேற்று முன்தினம் இரவு கொண்டு செல்லப்பட்டது. புலிப்பாக்கம் அருகே நேற்று அதிகாலை சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தீயணைப்பு படை வீரர்கள் மூலம் 2 மணி நேரம் போராடி கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், டிரைவரின் கவன குறைவால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

* வாலிபருக்கு இரும்பு ராடு அடி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அனுமந்தபுத்தேரி ராமபாளையத்தை சேர்ந்தவர் முத்து (35). அதே பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (35). இருவரும் பன்றி வளர்த்து வருகின்றனர். அர்ஜுனனின் பன்றி அடிக்கடி மாயமானது. அந்த பன்றிகளை முத்து, திருடி விற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று அர்ஜுனன், தனது நண்பர் அருள் என்பவருடன் முத்து வீட்டுக்கு சென்று, அவரை தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும், முத்துவை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். படுகாயமடைந்த முத்துவை, அக்கம் பக்கத்தினர், மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

Related Stories:

>