×

அரசு நடுநிலைப்பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் இ-சேவை மையக் கட்டிடத்தில் செயல்படும் வகுப்புகள்

காஞ்சிபுரம், டிச. 10: காஞ்சிபுரம் அடுத்த காவாந்தண்டலம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் இ சேவை மையக் கட்டிடத்தில், மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால், பள்ளி கல்வித்துறை மீது கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த காவாந்தண்டலம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் அரை கிலோ மீட்டர் தூரம் இ சேவை மைய கட்டிடத்தில் சில வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கடந்த கல்வி ஆண்டு இறுதியில் இப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் உடைந்து விழுந்தது. இதையடுத்து, வேறு அறைகள் இல்லாததால் அந்த வகுப்பறை சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள இ சேவை மையக் கட்டிடத்தில் மாற்றப்பட்டன.இதனால் சில வகுப்புகள் ஏற்கனவே உள்ள பள்ளி கட்டிடத்திலும், சில வகுப்புகள் நீண்ட தூரத்தில் உள்ள கட்டிடத்திலும் நடப்பதால், பள்ளிக் கல்வித்துறை மீது பெற்றோர்கள் அதிருப்திடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமலைவாசனிடம் கேட்டபோது, பள்ளிக் கட்டிட கான்கிரீட் உடைந்து விழுந்தவுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடுதல் பள்ளிக் கட்டிடம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் கடிதம் எழுதியுள்ளோம். ஆனால், இதுவரை அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என்றார். எனவே, இந்த பள்ளியில் மேலும் ஒரு கட்டிடம் பழுதடைந்து உள்ளதால், அந்தக் கட்டிடத்தையும் அகற்றிவிட்டு புதிதாக ஒரே இடத்தில் பள்ளி கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : classrooms ,Middle School ,center building ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி