காஞ்சிபுரத்தில் பரவலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம், டிச.10: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழைபெய்து கொண்டிருக்கிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழைப் பொழிவு இருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கணிசமான நீர்வரத்து இருந்தது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர், நவம்பர் மாத இறுதிவரை வறண்ட வானிலையே காணப்பட்டது. நவம்பர் இறுதியில் மீண்டும் மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரியான தென்னேரி முழுக் கொள்ளளவை எட்டியது. தாமல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் காஞ்சிபுரத்தில் பரவலாக கனமழை பெய்தது. இதையொட்டி குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள்  மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

அதேநேரத்தில் தொடர் மழையால் காஞ்சிபுரத்தில் ஜெம் நகர், ஓரிக்கை மிலிட்டரி சாலையில் உள்ள ஆசிரியர் நகர், ராஜன் நகர், திருவேங்கடம் நகர், காஞ்சிபுரம் மேட்டுத் தெரு, கீரை மண்டபம், செட்டித்தெரு, ரங்கசாமி குளம் உள்பட பல பகுதிகளில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் குளம்போல் சாலையிலேயே தேங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் அவதியடைந்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம், சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Related Stories:

>