அடகு கடையில் நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி

திருப்போரூர், டிச.10: கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் விமல்சந்த் ஜெயின் (45). திருப்போரூர் - கூடுவாஞ்சேரி சாலை நெல்லிக்குப்பம் பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக அடகுக்கடை நடத்தி வருகிறார். அதனுடன் சிறிய அளவில் நகைக்கடையும் நடத்துகிறார். நெல்லிக்குப்பம், அகரம், கீழூர், தர்மாபுரி, அம்மாப்பேட்டை, காட்டூர், கல்வாய் உள்பட பல்வேறு கிராம மக்கள், தங்களது நகைகளை இவரது கடையில் அடகு வைத்து பணம் பெற்று செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் விமல்சந்த் கடையில் இருந்தார். அப்போது, முகத்தில் கர்சீப் கட்டிக் கொண்டு, பைக்கில் வந்த 3 வாலிபர்கள், கடையின் முன்பு பைக்கை நிறுத்தி விட்டு, திடீரென கடைக்குள் நுழைந்தனர். அங்கு, அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி, விமல்சந்தை மிரட்டி பணம், நகைகளை கேட்டனர். சுதாரித்து கொண்ட விமல்சந்த், தனது இருக்கையின் அருகே பொருத்தி வைத்திருந்த அலார பட்டனை அழுத்தினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள், அடகுக்கடையை நோக்கி ஓடி வந்தனர். உடனே3 பேரும், பைக்கில் ஏறி தப்பினர்.

தகவலறிந்து திருப்போரூர் மற்றும் காயார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர், கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை  ஆய்வு செய்து, தப்பி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில், செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், மாமல்லபுரம் கூடுதல் எஸ்பி சுந்தரவதனம் ஆகியோர், கொள்ளை முயற்சி நடந்த கடைக்கு நேரில் பார்வையிட்டனர். கடந்த சில மாதங்களாக திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர், ஓஎம்ஆர், ஈசிஆர் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி கலாசாரம் தலையெடுத்துள்ளது. பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையின்போது தாழம்பூர் காவல் நிலைய எல்லையில் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் கடந்த மாதம் வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். தற்போது நெல்லிக்குப்பம் அடகு கடையில் 3 வாலிபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியில் துப்பாக்கி வைத்திருப்பவர்களை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் விழி பிதுங்கி உள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்வது யார், வட மாநில கொள்ளையர்களா அல்லது உள்ளூர் கொள்ளை கும்பலா என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : pawn shop ,
× RELATED கமுதி அருகே வெடிகுண்டு, துப்பாக்கி பதுக்கலா?.. போலீசார் சோதனையால் பரபரப்பு