×

உத்திரமேரூர் அருகே உள்ள கிராமங்களில் அறுவடை செய்ய முடியாதபடி மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

உத்திரமேரூர், டிச.10: உத்திரமேரூர் அருகே உள்ள கிராமங்களில் அறுவடை செய்ய முடியாதபடி மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலையோரங்களில் இருபுறமும் மழைநீர் கால்வாய்கள் இருந்தன. இதன் மூலம் மழைநீர், நீர்நிலைகளுக்கு செல்ல ஏதுவாக இருந்தது. இந்த கால்வாய்கள், முறையாக பராமரிக்காமல் விட்டதால், பெருமளவு ஆக்கிரமிப்பில் சிக்கியும், தூர்ந்து போயும் காணப்படுகிறது.
இதனால், மழை பெய்தாலும் உத்திரமேரூர் சுற்றியுள்ள ஏரி, குளம், குட்டை என எந்த நீர்நிலைகளிலும் முறையாக மழைநீர் செல்லாமல், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமலும், பொது மக்கள் குடிநீர் பற்றாக்குறையாலும் தொடர்ந்து தவித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களில் பெய்த பலத்த மழையால், மாவட்டத்தில் பல ஏரிகள் நிரம்பியுள்ளன. ஆனால் உத்திரமேரூர் ஒன்றியத்தில் மட்டும் பெருமளவு ஏரிகள் நிரம்பாமல் வறண்டு கிடக்கின்றன. மழையின் அளவு கனிசமாக இருந்தாலும் மழைநீர் வீணாக வெளியேறி விவசாய நிலங்கள் வழியே செல்கிறது. இதையொட்டி, விவசாயிகளின் பயிர்கள் மழை நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை தண்ணீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் விவசாயம் செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர். அதுபோல், விவசாயம் செய்தாலும் இயந்திரத்தின் உதவி கொண்டு நடவு அறுவடை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் உத்திரமேரூர் ஒன்றியத்தில்  இளநகர், புலிவாய், திருப்புலிவனம், நல்லூர் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்ட பல ஏக்கர் நெற்பயிர்கள், தற்போது பெய்த மழையில் மூழ்கிவிட்டன. இதுபோல் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை, இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாமல், அதிக கூலி கொடுத்து ஆட்கள் மூலம் கையில் அறுவடை செய்கின்றனர்.

மேலும் இவ்வாறு அறுவடை செய்த கதிர்களை இயந்திரம் மூலம் நெய்பயிர்களை பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிக செலவு ஆவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், நஷ்டம் ஏற்பட்டுள்ள விவசாயிகளை கணக்கிட்டு, அதனை ஈடு செய்யும் வகையில் நிவாரண தொகை வழங்க வேண்டும். மீண்டும் விவசாயம் பாதிக்காதவாறு நீர்நிலைகளை முறையாக பராமரித்து கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags : paddy fields ,Uthramerur ,villages ,
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து...