விபத்தில் வாலிபர் பலி லாரி டிரைவர் உள்பட 3 பேர் கைது

கிருஷ்ணகிரி, டிச.9: கிருஷ்ணகிரி அருகே, லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மற்றும் தனியார் நிறுவனத்தின் கண்ணாடியை அடித்து உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணெகோல்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயன்(28). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், தனது நண்பரான பீமாண்டப்பள்ளியை சேர்ந்த வெங்கடாஜலபதி(25) என்பவருடன், கக்கன்புரம்-எண்ணெகோல்புதூர் பிரிவு சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த லாரி, அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே திம்மராயன் உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வெங்கடாஜலபதி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையறிந்த திம்மராயனின் உறவினர்கள், சம்பவ இடத்தில் திரண்டு, விநாயகபுரத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த காவலாளி அறையின் கண்ணாடிகளை உடைத்தனர்.

 இதுகுறித்து தகவலறிந்து வந்த குருபரப்பள்ளி போலீசார், சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்து வெங்கடாஜலபதி அளித்த புகாரின் பேரில், நாமக்கல்லைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்வராஜ் என்பவரை, குருபரப்பள்ளி போலீசார் கைது செய்தனர். இதேபோல் தனியார் நிறுவன செக்யூரிட்டி சூபர்வைசர் சிகாமணி அளித்த புகாரின்பேரில், எண்ணேகொல்புதூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(27), ரஞ்சித்குமார்(24), ஆனந்தன்(24), பிரகாஷ்(25) உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிவக்குமார், ரஞ்சித்குமார் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆனந்தன் மற்றும் பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>