×

அரசு பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையில் திடீர் திடீரென பெயர்ந்து விழும் மேற்கூரை: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சென்னை: சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழக அரசின் பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனை கடந்த 2014ம் ஆண்டு திறக்கப்பட்டது. 6 மாடிகளை கொண்ட இந்த மருத்துவமனையில் 400 படுக்கைகள், 20 நவீன அறுவை சிகிச்சை அரங்கங்கள், 200 கழிப்பறைகள், பரிசோதனைக் கூடங்கள், நூலகம் மற்றும் நோயாளிகளை ஸ்டிரெச்சர் மற்றும் வீல் சேர்களில் அழைத்து செல்ல சாய்வு தளங்கள், லிப்ட்கள் மற்றும் பேட்டரி கார்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு, நரம்பு மற்றும் நரம்பு அறுவை சிகிச்சை பிரிவு, இதய மற்றும் இதய அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு, கை - முகம் சீரமைப்பு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ரத்தக்குழாய் சிகிச்சை பிரிவு, ஆர்த்ரோஸ்கோபி, சிறுநீரக துறை, மயக்கவியல் துறை, ரத்தநாள துறை மற்றும் ஸ்கேன் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.தினசரி 200 முதல் 500  வெளி நோயாளிகளும், 250 முதல் 300 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறும் இந்த மருத்துவமனையில் பராமரிப்பு பணி முறையாக நடைபெறுவதில்லை. குறிப்பாக, ஒவ்வொரு தளத்திலும் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள ஏசி மெஷின்களுக்கான பைப்லைன்களில் நீர் கசிவு ஏற்படுவதால் பால் சீலிங் வலுவிழந்து வார்டுகளில் தண்ணீர் சொட்டும் நிலை உள்ளது.

பல நாட்களாக பால் சீலிங் நீரில் நனைவதால் ஆங்காங்கே திடீர் திடீரென உடைந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி மின் விளக்குகளும் ஆங்காங்கே பெயர்ந்து ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. இதனால், நோயாளிகள் அச்சதுடன் வந்து செல்கின்றனர். மேற்கூரையில் இருந்து ஒழுகும் தண்ணீர் வராண்டா மற்றும் வார்டுகளின் தரையில் தேங்குவதால், இதை கவனிக்காமல் நடந்து செல்லும் நோயாளிகள் வழுக்கி விழும் அவலம் உள்ளது. இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ‘‘பல கோடி மதிப்பில், தனியார் மருத்துவமனைக்கு இணையாக அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனையை அரசு முறையாக பராமரிப்பதில்லை. இதனால், அனைத்து வார்டுகளிலும் மேற்கூரையில் இருந்து தண்ணீர் சொட்டுகிறது. அவ்வப்போது மேற்கூரை உடைந்து விழுவதால் அச்சத்துடன் வந்து செல்கிறோம். வார்டுகளுக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால், நோயாளிகள் வழுக்கி விழும் அவலம் உள்ளது. இதனை துப்புரவு பணியாளர்கள் கண்டுகொள்வதே இல்லை.

மின்விளக்கு, சுவிட்ச்கள், கழிப்பறை கதவுகள், தாழ்ப்பாள் உள்ளிட்டவை உடைந்து அலங்கோலமாக உள்ளன. இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டால், ‘அரசு மருத்துவமனை அப்படித்தான் இருக்கும். விருப்பம் இருந்தால் இங்கு சிகிச்சை பெறுங்கள். இல்லையெனில் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்’ என கடிந்து கொள்கின்றனர். இந்த மருத்துவமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ஆண்டுதோறும் அரசு பல லட்சம் ரூபாயை ஒதுக்குகிறது. ஆனால், அந்த நிதி எங்கு போகிறது, என தெரியவில்லை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு தான் மருத்துவமனை மாளிகை போல் உள்ளது. உள்ளே வந்து பார்த்தால், மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.  

செவிலியர் பற்றாக்குறை
மருத்துவமனையில் போதிய செவிலியர்கள் பணியில் இல்லாததால், உள்நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருந்து, மாத்திரை வழங்குவது, ஊசி போடுவது போன்ற பணிகள் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, அறுவை சிகிச்சை செய்தவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கு தினசரி சரியான நேரத்துக்கு ஊசி போடப்படுவதில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அச்சுறுத்தும் எலிகள்
வார்டு அறைகளில் நோயாளிகளின் படுக்கை அருகிலேயே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தினசரி நோயாளிகள் இந்த தொட்டியில் வீசும் உணவு கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் முறைப்படி அகற்றுவதில்லை. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், எலித்தொல்லை அதிகரித்துள்ளது. இந்த எலிகள் பகலிலேயே அங்கும் இங்கும் ஓடுவதால், அறுவை சிகிச்சைக்கு வந்தவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Tags : collapse ,Government ,Panchayat ,Modern Specialty Hospital ,
× RELATED அடையாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும்...