வடியாத மழை வெள்ள நீரால் கடலூர் பகுதி மக்கள் பாதிப்பு

கடலூர், டிச. 5: கடலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை வெள்ள நீர் வடிவதற்கான நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் நகராட்சி மெத்தனப் போக்கால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கடலூர் நகரம் 45 வார்டு பகுதியை கொண்டது. கோண்டூர், பாதிரிக்குப்பம், குண்டு உப்பலவாடி உள்ளிட்ட புறநகர் பகுதிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி முதல் கடலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை தற்பொழுது நின்று உள்ள நிலையிலும் மழை வெள்ள நீர் வடியாத நிலை பல்வேறு நகர் பகுதியில் காணப்படுகிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர், பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம் போன்ற குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தொடர்ந்து தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மழைநீர் வடிகால் முறையான செயல்பாடு இல்லாததால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று முதுநகர் பகுதியில் உள்ள பீமா நகர், சான்றோர்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் குப்பைகள் கழிவுநீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள துரைசாமி நகர், வண்ணார பாளையம், வில்வ நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேக்கம் கழிவுநீருடன் கலந்து பொதுமக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நகராட்சி நிர்வாகம் உரிய வடிகால் வசதியை மேம்படுத்தாமல் இருப்பதால் மழைவெள்ள நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் தேங்கியுள்ள மழை வெள்ள நீரில் கழிவுநீரும் கலந்து வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வழக்கமாக மழைக்காலங்களில் பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள் பயன்பாடு மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் பணிகள் உள்ளிட்டவை நகராட்சி நிர்வாகத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும். ஆனால் இம்முறை குறைந்த அளவிலான பொக்லைன் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், துப்புரவு பணிகளை துரிதப்படுத்தாமல் கிடப்பதாகவும் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மழை ஓய்ந்த நிலையிலும் வடியாத சோகமாக கடலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தேங்கியுள்ள மழை வெள்ளநீர் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடலூர் நகர மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

Related Stories:

>