×

ரோசல்பட்டி ஊராட்சியில் இருபது ஆண்டாக சீரமைக்கப்படாத சாலை

விருதுநகர், டிச. 5:விருதுநகர் மல்லாங்கிணர் ரோட்டில் உள்ள ரோசல்பட்டி ஊராட்சியில் பாண்டியன் நகர், முத்தால் நகர், எம்ஜிஆர் நகர், சத்தியசாயி நகர், ஜக்கதேவி நகர், காந்தி நகர், தங்கமணி காலனி, கே.கே.எஸ்.எஸ்.என்.நகர், ஓடைப்பட்டி, ரோசல்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன; 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கம், ஊராட்சி விரிவாக்கத்திற்கு ஏற்ப வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெறவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.
ஊராட்சி நுழைவுப் பகுதியில் தேவர்சிலை எதிர்புறம் உள்ள சின்ன குருசாமி ரோட்டில் இருபுறமும் முத்தால் நகர், பாண்டியன் நகர், சத்தியசாயி நகர், எம்ஜிஆர் நகர் ஆகியவை அமைந்துள்ளன. தேவர் சிலை எதிர்புறம் மல்லாங்கிணர் ரோட்டில் தொடங்கி பேராலி ரோடு வரையிலான இணைப்புச் சாலை 1.40 கி.மீ தூரமுடையது. இச்சாலையை 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரோட்டை முழுமையாக அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன் பகுதி, பகுதியாக போட்டனர். இந்த ரோட்டின் இருபுறமும் வாறுகால் இல்லாததால் குடியிருப்புகள், ஓட்டல், கடைகளின் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. கடைகள், குடியிருப்புகளின் ஆக்கிரமிப்பால் 30 அடி அகலமுள்ள தேவர்சிலை எதிர்ப்புற ரோடு அகலம் குறைந்துள்ளது.

பேராலி ரோடு இணைப்புச் சாலையாக இருப்பதால் மினிபஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள், மினிவேன்கள், லாரிகள், லோடு வேன்கள் சென்று வருகின்றன. ஆக்கிரமிப்பு கடைகளால் ரோட்டில் பள்ளி வேன்கள், மினிபஸ்கள் செல்லும்போது, எதிரே வரும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் ரோடு குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கழிவுநீர், மழைநீர் ரோட்டில் தேங்கி நிற்பதால் டூவீலர், சைக்கிள், நடந்து செல்வோர் வழுக்கி விழுந்து காயத்துடன் செல்கின்றனர்.
கழிவுநீரும், மழைநீரும் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதி தேங்கி கிடக்கிறது. இதில் மலேரியா, டெங்கு பரப்பும் கொசுகள் உற்பத்தியாகி மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, 20 ஆண்டுகளுக்கு முன் போட்ட ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து முத்தால் நகர் புஷ்பராஜ் கூறுகையில், ‘பாண்டியன் நகர் தேவர் சிலை எதிர்புறம் 1.40 கி.மீ நீளமுள்ள சாலை 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, இருபுறமும் வாறுகால் அமைத்து தரமான முறையில் போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Rosalpatti ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...