சாலை பணிகளால் ராசிபுரம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல்

ராசிபுரம், டிச.5: ராசிபுரம் நகராட்சி பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராசிபுரம் நகராட்சி பகுதியில் கடந்த 2 ஆண்டாக பாதாள சாக்கடை மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. மேலும் குடிநீர் திட்ட பணிக்காக பல இடங்களில் சாலையோரங்களில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, ராசிபுரம்-சேலம் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.மேலும், சிதிலமடைந்த சாலை வழியாக பயணிக்க இயலாத வாகன ஓட்டிகள், இந்த சாலை வழியாக வர வேண்டி உள்ளது. அதே போல் குண்டும், குழியுமான பகுதியில் டூவீலரில் வரும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்லும் நிலை நீடிக்கிறது. எனவே, ராசிபுரம் நகர் பகுதியில் சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rasipuram Nagar ,
× RELATED போக்குவரத்தை தடுக்க வலியுத்தல்