×

உதவி ஆணையர் பற்றி வாட்ஸ் அப்பில் அவதூறு

நாமக்கல், டிச.5: ஆஞ்சநேயர் கோயில் உதவி ஆணையர் பற்றி வாட்ஸ் அப்பில் அவதூறு  பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாமக்கல் எஸ்பியிடம் உதவி ஆணையார் புகார் அளித்துள்ளார்.நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோயில் உதவி ஆணையாளராக ரமேஷ் கடந்த 4 ஆண்டாக பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்ற பின், கோயில் நடைமுறைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். இதனால்  உதவி ஆணையருக்கும், குறிப்பிட்ட சில அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் வாட்ஸ் அப் குரூப்களில் உதவி ஆணையரின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சனம் செய்து, சிலர் தகவல் பரப்பி வருகிறார்கள். வாட்ஸ் அப் குரூப்களில் உதவி ஆணையர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள்:உற்சவங்கள் குறித்த காலத்தில் நடைபெறாமல், தவறான நாளில் செய்யப்படுகிறது. கோயிலில் பல ஆண்டாக பிரசாதம் மற்றும் வடை செய்யப்பட்டு வந்த மடப்பள்ளி, சாஸ்திர விரோதமாக மாற்றப்பட்டுள்ளது. பரம்பரை பரம்பரையாக  பூஜை செய்து வந்த அர்ச்சகர்கள், கோயில் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆஞ்சநேயர் ஜெயந்திக்கு சாத்தப்படும் வடைகள், சுகாதாரம் மற்றும் மடி ஆச்சாரம் இல்லாமல் கடை வியாபாரத்துக்கு செய்வது போல செய்யப்படுகிறது. பழங்கால நகைகளை சுவாமிக்கு அணிவிக்காமல், டூப்ளிகேட் நகைகள் கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது. கோயிலில் நடைபெற்று வந்த பல உற்சவங்கள் நிறுத்தப்பட்டு விட்டது. இது போன்ற செயல்பாடுகளை பார்க்கும் போது, உதவி ஆணையர் கிறிஸ்தவர் என்ற சந்தேகம் வலுக்கிறது. இவ்வாறான குற்றச்சாட்டுகள் வாட்ஸ் அப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு உதவி ஆணையரும், தனது ஆதரவாளர்கள் மூலம் வாட்ஸ் அப் குரூப்களில் பதில் அளித்துள்ளார். இது குறித்து உதவி ஆணையர் ரமேஷ் கூறியதாவது:கோயிலில் அனைத்து உற்சவங்களும், குறித்த காலங்களில் நடந்து வருகிறது. நரசிம்மசுவாமி கோயிலில் உள்ள மடப்பள்ளியில் ஆஞ்சநேயர் அபிஷேகத்துக்கு வடை தயாரித்து, அங்கிருந்து ஆஞ்சநேயர் கோயிலுக்கு எடுத்து வரவேண்டியுள்ளதால், கோயில் அருகாமையில் மடப்பள்ளி ஏற்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை விதிமுறைப்படி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நான் இந்து என்பது அனைவருக்கும் தெரியும். வேறு மதத்துக்காரன் என்பது போல என்னை அவதூறாக தகவல் பரப்புகிறார்கள். ஆஞ்சநேயருக்கு செய்யும் சேவையாக கருதி, எனது பணியை செய்து வருகிறேன். என்மீது கூறப்படும் புகார்களில் சிறிதும் உண்மையில்லை. ஆஞ்சநேயர் கோயிலை பற்றியும், என்னை பற்றியும் வாட்ஸ் அப் குரூப்களில் அவதூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு உதவி ஆணையர் ரமேஷ் தெரிவித்தார்.

2 மாதத்தில் மீண்டும் நாமக்கல்லுக்கு மாறுதல்:உதவி ஆணையர் ரமேஷ், நாமக்கல் அருகேயுள்ள சேந்தமங்கலத்தை சேர்ந்தவர். இவரது உறவினர்கள் பலரும் நாமக்கல்லில் பெரிய தொழிலதிபராக இருக்கிறார்கள். கடந்த 2016ம் ஆண்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உதவி ஆணையராக பொறுப்பேற்ற இவர், திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயிலுக்கு மாறுதலில் சென்றார். 2 மாதத்தில், மீண்டும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு மாறுதல் வாங்கி கொண்டு வந்துவிட்டார். ஆரம்பத்தில் இவர் மீது ஆன்மீக பேரவை அமைப்பினர் புகார் கூறிவந்தனர். தற்போது அர்ச்சர்களில் சிலர் புகார் கூறி வருகிறார்கள்.

Tags : Assistant Commissioner ,
× RELATED ஏப்.19ல் ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத...