×

பராமரிப்பு எப்போதும் இல்லை நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள்

சாயல்குடி, டிச.5:  முதுகுளத்தூர் போக்குவரத்து கிளையில் உடைசலான பஸ்களை பெரும்பான்மையாக இயக்கப்படுவதாலும், போதிய பராமரிப்பின்றி ஆங்காங்கே திடீரென பழுதாகி நிற்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் பிரிவு, காரைக்குடி மண்டலம், முதுகுளத்தூர் கிளையின் சார்பில் 57 பஸ்கள் இயக்கப்படுகிறது. முதுகுளத்தூைரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கும், ராமேஸ்வரம், திருச்செந்தூர், வேளாங்கண்ணி, நாகூர் போன்ற ஆன்மீக நகரங்களுக்கும், முதுகுளத்தூர், கடலாடி தாலுகா பகுதிகளுக்கு நகர பஸ்களும் இயக்கப்படுகிறது.
இங்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும் இரண்டாம் நிலை பஸ்களாக உள்ளது. இதனால் உடைந்த இருக்கைகள், கால்களை பதம்பார்க்கும் படிக்கட்டுகள், மழைக்கு ஒழுகும், ஓட்டை உடைசலான பஸ்கள் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நெடுந்தொலைவு இயக்கப்படும் பஸ்களில் டீசல் சேமிப்பிற்காக, 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைக்கப்படுகிறது. இதனால் பயணிகள் எரிச்சலடைந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிகழ்ச்சி தினந்தோறும் நடந்த வருகிறது. தெளிவாக எரியாத முகப்பு விளக்குகள், உடன் நிற்காத பிரேக்குகளால் விபத்து ஏற்படும் அச்சம் நிலவுகிறது.

முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதியில் இயக்கப்படும் நகர பஸ்கள் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இயக்கப்படும் பஸ்கள் என்பதால் கிராம பகுதிகளுக்கு செல்லும் போது ஏதாவது காரணத்தால் திடீரென பழுதாகி நின்றுவிடுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.
கிராமங்களில் ஒருவழிப்பாதை என்பதால் பஸ்கள் பழுதாகி நிற்பதால், அன்றைய நாள் மற்ற வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாது. எனவே முதுகுளத்தூர் கிளையில் தரமானதாக, பயணிகளின் உயிருக்கு உத்தரவாதமான பஸ்களை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சின்னதாராபுரத்தில் பராமரிப்பின்றி...