×

பந்தலூர் அருகே பள்ளி நிர்வாகம் தூண்டுதலால் ஆசிரியர் போக்சோவில் கைது

பந்தலூர், டிச.5: நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கையுன்னி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணி புரிந்து வருபவர் முருகேசன்(49). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் 6ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி  கடந்த சில நாட்களாக சோகத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால்  சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர் இதுபற்றி கேட்டுள்ளனர். அப்போது மாணவி, பள்ளி ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்தார் என கூறியுள்ளார் இதையடுத்து மாணவி மற்றும் அவரது பெற்றோர் தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின்பேரில் தேவாலா டி.எஸ்பி. விஜயகார்த்திகேயன் மற்றும் தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையம் பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி ஆகியோர் பள்ளி ஆசிரியர் முருகேசன் மீது வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று காலை மற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கையுன்னி பகுதியில் கூடி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது பள்ளி நிர்வாகத்தின் திட்டமிட்ட செயல் என்றும், முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு சேரம்பாடி எஸ்.ஐ. ஆனந்தவேல் மற்றும் போலீசார் வந்தனர். அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது, பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான மரத்தை பள்ளி நிர்வாகத்தினர் வெட்டினர். அதற்கு ஆசிரியர் முருகேசன், நிழல் தரும் மரத்தை வெட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி வளாகத்தில் புற்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது மற்றும் இயற்கைக்கு எதிரான விசயங்களில் ஆசிரியர் ஒத்துழைக்காமல் இருந்து வந்தார். இதனால் அதிருப்தியடைந்த பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி மாணவியை பயன்படுத்தி ஆசிரியர் மீது அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்படுத்தி போலீசில் புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ளனர். இதனை மறு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
இதற்கு போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.அனைத்து மாணவர்களையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்வித்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் இதில் தலையிட்டு முறையாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் முன்னிலையில் ஆசிரியர் முருகேசனின் மனைவி கூறி கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Teachers ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்