அயப்பாக்கம் ஊராட்சியில் குப்பை தொட்டியாக மாறிய கால்வாய்

ஆவடி, டிச.5: ஆவடி அருகே அயப்பாக்கம் ஊராட்சியில் மழைநீர் கால்வாயில் கொட்டப்படும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீர் குடியிருப்புகளில் புகும் அபாயம் உள்ளது.

    ஆவடியில் இருந்து அயப்பாக்கம் வழியாக அம்பத்தூருக்கு சாலை செல்கிறது. இச்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். மேலும், ஆவடியில் இருந்து சி.டி.எச் சாலை வழியாக அம்பத்தூர் சென்றால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர். இதனை தவிர்க்கவே, மேற்கண்ட சாலையை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இச்சாலை அமைந்துள்ள அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மழைநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் வழியாக மழை காலத்தில் தண்ணீர் தேங்காமல் பல ஆண்டாக செல்கிறது.  இந்நிலையில், கடந்த சில ஆண்டாக இந்த கால்வாய் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இந்த கால்வாயை சில இடங்களில் சிமெண்ட் சிலாப் போட்டு மூடி ஆக்கிரமித்துள்ளனர். மேலும், தற்போது கால்வாயில் அதிகளவில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதன் விளைவாக, கால்வாயை குப்பை தொட்டியாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மேற்கண்ட கால்வாயில் மழை பெய்தால் தண்ணீர் செல்ல வழி இல்லை.  தற்போது, பருவமழை பெய்து கொண்டிருக்கும் வேளையில் கால்வாய் பல இடங்களில் சீரமைக்காமல் உள்ளது. இதனால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாது. இதன் காரணமாக, மழை நீர் சாலையில் ஓடும் அவலம் ஏற்படும். இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுவார்கள். மேலும், அச்சமயம் தண்ணீர் செல்ல முடியாமல் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இதோடு மட்டுமல்லாமல், கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தற்போது பெய்யும் மழையில் குப்பைகள் மக்கி கடும் தூர்நாற்றம் வீசுகிறது. மேலும், கால்வாயில் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பெரியவர் முதல் சிறியவர்கள் வரை கடிக்கின்றன. இதன் காரணமாக, அவர்கள் பல்வேறு வகையான காய்ச்சல்களால் அவதிப்பட வேண்டிய அவல நிலை உள்ளது.

இதனை அடுத்து,  ஊராட்சி நிர்வாகம் கவனித்து ஆவடி முதல் அம்பத்தூர் வரை செல்லும் சாலையில் உள்ள கால்வாய்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும். அதில் உள்ள குப்பைகளை அகற்றி கால்வாயை சீரமைக்கவும் வேண்டும்.  இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் அயப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார் அனுப்பியும் அதிகாரிகள் அலட்சியமாகவே உள்ளனர். எனவே, இனிமேலாவது வில்லிவாக்கம் ஒன்றிய அதிகாரிகள் கவனித்து அயப்பாக்கம் ஊராட்சி பகுதியில் மழைநீர் கால்வாய்களில் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றவும், குப்பைகள் கொட்டுவதை தடுத்து, கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>