லோன் வாங்கி தருவதாக ஆவணங்களை பெற்று டிவி, பிரிட்ஜ் வாங்கி பல லட்சம் மோசடி

சென்னை: லோன் வாங்கித்தருவதாக ஆவணங்களை பெற்று பல லட்சம் ரூபாய் மதிப்புளள்ள பொருட்களை வாங்கி மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பாரிமுனை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் பல்கியா பேகம் (25). அண்ணாநகர், முகப்பேரை சேர்ந்தவர் பிரவீன் (24). வேளச்சேரியை சேர்ந்தவர் சந்துரு (26). இவர்கள் 3 பேரும் வடக்கு கடற்கரை போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதில், ‘‘ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து பாரிமுனை மண்ணடி பகுதிக்கு சென்றோம். அங்குள்ள அலுவலகத்தில் சாலிகிராமத்தை சேர்ந்த மீனா (32), மண்ணடியை சேர்ந்த சங்கர் (35) ஆகியோர் இருந்தனர். அவர்கள், ‘‘லோன் வாங்கி தருகிறோம். உங்களது அனைத்து ஆவணங்களும் வேண்டும்’’ எனக் கூறி எங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கிக்கொண்டனர். ‘சில நாட்களில் உங்களது வங்கி கணக்குக்கு லோன் பணம் வந்துவிடும்’ என கூறினர். ஆனால் பணம் வரவில்லை.

இந்நிலையில் கடை ஊழியர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து, ‘டிவி, வாஷிங் மிஷின் வாங்கியதற்கான தவணை பணத்தை கட்டும்படி கூறினர். அதன் பிறகுதான் எங்களது ஆவணங்களை காண்பித்து கடைகளில் வாஷிங் மிஷின், பிரிட்ஜ், லேப்டாப், டிவி, ஐபோன் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது. உடனே மண்ணடிக்கு சென்றால் அலுவலகம் பூட்டி கிடந்தது. எனவே, லோன் வாங்கி தருவதாக ஆவணங்களை பெற்று மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறி இருந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தபோது மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மீனா, சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>