×

கோவில்பட்டி வட்டார நீர்நிலைகளில் கவனமாக குளிக்க வேண்டும் காவல் துறை அறிவுறுத்தல்

கோவில்பட்டி, டிச. 5:  கோவில்பட்டி காவல் உட்கோட்டத்தில்  கோவில்பட்டி, கழுகுமலை கயத்தாறு, கொப்பம்பட்டி, நாலாட்டின்புதூர் ஆகிய  இடங்களில் காவல்நிலையங்கள் உள்ளன. கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் இங்குள்ள குளம் மற்றும் கண்மாய்களில் தண்ணீர் பெருமளவில் நிரம்பியுள்ளது. இதனால் இத்தகைய நீர்நிலைகளில் குளிக்க சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்துத்தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் எஸ்பி அருண்  பாலகணேசன் உத்தரவின்பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் ஏற்பாட்டின் பேரில் தொடர் கனமழையால் தண்ணீர் நிரம்பி காணப்படும் கோவில்பட்டி அருகே  நாலாட்டின்புதூர், முடுக்குமீண்டான்பட்டி, கழுகுமலை, மூப்பன்பட்டி,  வில்லிசேரி, ஊத்துப்பட்டி, மந்தித்தோப்பு, இடைசெவல் உள்ளிட்ட அனைத்து  கிராமங்களில் உள்ள கண்மாய், குளங்களின் கரையோரங்களில் காவல்துறை சார்பில்  விழிப்புணர்வு எச்சரிக்கை அறிவிப்பு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

அதில், நீர்நிலைகளில் கவனமாக குளிக்க வேண்டும். குறிப்பாக குளம் மற்றும் கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதால்  ஆழமானதாகவும், அபாயகரமாக உள்ளது.  அடிப்பகுதியில் சகதி  நிறைந்துள்ளதால் நீச்சல் தெரியாதவர்கள் யாரும் இங்கு குளிக்க கூடாது. சிறுவர்களை குளிக்கும் இடங்களுக்கு அழைத்துச்செல்லும் போது கவனமாக  பார்த்துக்கொள்ள வேண்டும். மது அருந்தி விட்டு கண்டிப்பாக  குளிக்கக் கூடாது. இளைஞர்கள் விளையாடியபடி குளிக்கக் கூடாது. மனித உயிர்களின் விலை மதிக்க முடியாதது. மேலும் இதை இழந்தால் யாரும் திரும்பப்பெற  இயலாது.

எனவே, இதுபோன்ற நீர்நிலைகளில் நாம் கவனமாக, பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. காவல்துறையினரின் இந்த எச்சரிக்கை அறிவிப்பு  பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவில்பட்டி அருகே  இனாம்மணியாச்சி பைபாஸ்ரோடு சந்திப்பில் கனமழையால் சாலையோரத்தில் ஏற்பட்டுள்ள  பள்ளத்தை டிஎஸ்பி ஜெபராஜ் அறிவுறுத்தலின்படி போலீசார், பள்ளத்தில் மணல்  போட்டு நிரப்பி சீரமைத்தனர்.

Tags : locality ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வருபவருக்கு வலை