சுசீந்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

சுசீந்திரம், டிச.5: சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி டிச.25ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி  மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலய  சுவாமி கோயில். இங்கு 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இது ஒரே கல்லில்  செதுக்கப்பட்ட சிலையாகும். இந்த கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி ஆண்டு தோறும்  வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜெயந்தி விழா  வரும் 24ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி  முதல்நாளான 24ம் தேதி (செவ்வாய்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், 8  மணிக்கு ஸ்ரீநீலகண்ட விநாயகருக்கு  அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலய  சுவாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 6 மணிக்கு  காலபைரவருக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

மறுநாள் (25ம் தேதி)  ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று காலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம், 8 மணிக்கு  ஆஞ்சநேய சுவாமிக்கு மஞ்சள்பொடி, நெய், இளநீர், நல்லெண்ணெய், களபம்,  பன்னீர், பால், கரும்புச்சாறு, அரிசிமாவு விபூதி, தயிர், எலுமிச்சை  சாறு, குங்குமம், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் ஆகிய 16 வகையான அபிஷேக  பொருட்களாலான ‘ஷோடச அபிஷேகம்’ நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை  10.30 மணிக்கு 2 இடங்களில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம்  வழங்கப்படுகிறது. தொடர்ந்து பகல் 12மணிக்கு சிறப்பு தீபாராதனை, மாலை 6  மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது. மாலை 7 மணிக்கு  ஆஞ்சநேயர் சுவாமிக்கு கிரேந்தி, வாடாமல்லி ஆகிய மலர்களை விடுத்து, வாசனை  பூக்களால் சிறப்பு புஷ்பா பிஷேகம் நடைபெறுகிறது.

 இதில் ஆஞ்சநேயர்  சுவாமியின் கழுத்து பாகம் வரை பூக்களால் அபிஷேகம் செய்யப்படும் என்பது  குறிப்பிடத்தக்கது. இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர்  சுவாமிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. விழாவில் உள்ளூர் பக்தர்கள்  மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை  தருவார்கள்.  இதற்காக அரசு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள்  இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர்,  ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Related Stories:

>