×

கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் மைய மேற்கூரை இடிந்து விழுந்தது முறையான பராமரிப்பு இல்லாததால்

மதுரை, டிச. 4: தொடர் மழையால், மதுரை கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் மேல் விழும் தண்ணீர் வெளியேற வழியில்லாததால், கட்டிடம் பழுது ஏற்பட்டு, ஆதார் மைய மேற்கூரை இடிந்து விழுந்தது. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆவண காப்பகம் அலுவலகம் உள்ளது. இதன் அருகே ஆதார் மையம் சுமார் 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆதார் பதிவு செய்து வருகின்றனர். இதற்காக இந்த அறையின் மேற்கூரை பகுதியில் பிளாஸ்டர் ஆப் பாரீசினால் ஆன கூரை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் மாடியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வெளியேறும் குழாய்கள் அடைப்பட்டு இருப்பதால், மழைநீர் வெளியேற வழியின்றி, கட்டிடத்தின் மேற்கூரையில் விரிசல் வழியாக அலுவலக அறைக்குள் தண்ணீர் வந்துவிடுகிறது. இதே போன்றுதான்.

ஆவண காப்பக அலுவலக அறையின் மேல் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேறும் பைப் அடைப்பு காரணமாக மேற்கூரை விரிசல் வழியாக தண்ணீர் குழந்தைகளுக்கான ஆதார் மைய அலுவலகத்தில் வந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து மழைநீர் பல மாதங்களாக வந்ததால், ஆதார் மையத்தின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சீட்டில் தண்ணீர்பட்டு நேற்று திடீரென்று உடைந்து விழுந்தது. இந்த மையத்தில் பல பகுதிகள் இடிந்து விழுந்திருந்தது. இதனால் ஆதார் பதிவை ஊழியர்கள் நிறுத்தினர். இங்கு வந்த பொதுமக்களை வேறு மையத்தில் சென்று பதிவு செய்யும்படி வலியுறுத்தினர்.
மேற்கூரை இடிந்து விழுந்தபோது யாரும் இல்லை. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலம் மற்றும் மாவட்டத்தின் முக்கியமான ஆவணங்கள் இந்த மையத்தின் அருகே உள்ள அலுவலகத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த மைய அலுவலகம் அருகே உள்ள முதலமைச்சர் விரிவான காப்பீடு அறையிலும் கடந்த மாதம் இதேபோன்று மேற்கூரையின் பூச்சு இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Aadhar Center ,office ,Collector ,
× RELATED குமரி கலெக்டர் அலுவலக தேர்தல்...