×

கப்பலூர் டோல்கேட் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மதுரை, டிச. 4:  மதுரை-திருமங்கலம் ரோட்டில் கப்பலூரில் கடந்த 2012ல் டோல்கேட் அமைக்கப்பட்டது. நகராட்சி எல்லையையொட்டி டோல்கேட் அமைக்கக்கூடாது என்ற விதிமுறைகளை மீறி டோல்கேட் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள், திருமங்கலம் பகுதி வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருமங்கலம் நகர பகுதியை சேர்ந்த வாகனங்களுக்கு மட்டும் டோல்கேட்டில் இலவசமாக கடந்து சென்று வர இதுவரையில் அனுமதிதரப்பட்டது. திருமங்கலம் உள்ளூர் வாகனங்கள், கப்பலூர் சிட்கோ வாகனங்கள், டி.கல்லுப்பட்டி வாகனங்கள் அனைத்தும் கட்டாயம் டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் வலியுறுத்தி கெடுபிடி செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனைத்தொடர்ந்து, ஆர்டிஓ முருகேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. உள்ளூர் வாகனங்கள், 4 கி.மீ மட்டுமே நான்குவழிச்சாலையை பயன்படுத்தும் டி.கல்லுப்பட்டி, பேரையூர் வாகனங்கள் இலவசமாக டோல்கேட்டை கடந்து செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆர்டிஓ முன்னிலையில் அதனை ஏற்று கொண்ட டோல்கேட் நிர்வாகம் தற்போது அதனை மறுத்து கட்டணவசூல் செய்தது. இது திருமங்கலம் பகுதி வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கப்பலூரில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டை  அகற்ற வலியுறுத்தி நாளை (டிச.5) டோல்கேட் முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

 இந்த போராட்டத்தின் அறிவிப்பு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தும்படி கலெக்டருக்கு அமைச்சர் உதயகுமார் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று மாலை  மதுரை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வினய் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், எஸ்.பி மணிவண்ணன், ஆர்டிஓ முருகேசன், திருமங்கலம் போராட்ட குழுவினர். டோல்கேட் நிறுவனத்தார் கலந்து கொண்டனர்.   இதில் கலெக்டர் கூறும்போது, ‘இதுவரை உள்ள நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்து பின்பு ஒரு இறுதி முடிவு எடுப்போம். அதுவரை எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது’ என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கலெக்டரின் கோரிக்கையை ஏற்று, நாங்கள் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக போராட்ட குழு தலைவர் வேம்புவேந்தன் தெரிவித்துள்ளார். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Tags :
× RELATED பேரையூரில் நாளை மின்தடை