×

கேத்தி பாலாடா விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியதால் விவசாயிகள் பாதிப்பு

ஊட்டி, டிச. 4: ஊட்டி அருகேயுள்ள கேத்தி பாலாடா பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மூழ்கிய காய்கறி தோட்டத்தில் மழை நீர் வற்றாமல் உள்ளதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.  கடந்த நான்கு மாதங்களில் 3வது முறையாக கேத்தி பாலாடா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் பெய்த மழையின் போதும் இப்பகுதியில் சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி, கேரட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதன்பின், கடந்த செப்டம்பர் மாதம் மழையின் போதும் இப்பகுதியில் மழை நீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் கேத்தி மற்றம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையாலும், காட்டேரி அணைக்கு செல்லும் நீரோடையில் உடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் விளை நிலத்திற்குள் புகுந்தது.

இதனால், அப்பகுதியில் இருந்த சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. உடனடியாக வடிந்து விடும் என விவசாயிகள் கருதினர். ஆனால், நேற்றும் தண்ணீர் வடியவில்லை. மேலும், மழை நீரில் அடித்து வரப்பட்ட குப்பைகள், கசடுகள், மண் ஆகியவை விவசாய நிலங்களில் இரண்டு அடிக்கு தேங்கியுள்ளன. இதனால், இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீட்ரூட் போன்ற பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால், இப்பகுதி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இப்பகுதியில் மூன்றாவது முறையாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : rain water accumulation ,farmland ,Kathi palada ,
× RELATED கொள்ளிடத்தில் தொடர்ந்து...