×

மேம்பால பணிகளை முடிப்பதில் அலட்சியம் பட்டறை பெரும்புதூர், நாராயணபுரம் குறுகிய பாலங்களில் வெள்ள ஆபத்து

திருவள்ளூர், டிச. 4: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்,  பட்டறைபெரும்புதூர், நாராயணபுரம், பகுதிகளில் உள்ள குறுகலான பாலங்களின்கீழ் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லவேண்டி உள்ளது. இங்கு மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் துவங்கும் திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, ஆந்திர மாநிலம், மதனபள்ளி வரை 442 கி.மீ., தூரம் செல்கிறது. தமிழகத்தின் திருநின்றவூரில் இருந்து, ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா வரை, 124 கி.மீ., தூரத்தை, ஆறுவழிச் சாலையாக மாற்ற 2011ம் ஆண்டு, மத்திய அரசு, 571 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. சாலை விரிவாக்கத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, திருவள்ளூரில் இருந்து, புத்தூர் வரை, இருவழி சாலையாக மட்டுமே மாற்றப்பட்டு உள்ளது. புத்தூரில் இருந்து ரேணிகுண்டா வரை நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டுவிட்டது. சாலையை அகலப்படுத்தாமலேயே, 2015 மார்ச் 1ம் தேதி முதல், கட்டண சாலையாக மாற்றி, பட்டரைபெரும்புதூரில் அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடியில், கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரை, இருவழிச் சாலையாக இருப்பதால், பாதுகாப்பற்ற சாலையாக திகழ்கிறது. திருப்பாச்சூர் முதல் திருத்தணி வரை 20க்கும் மேற்பட்ட இடங்களில் அபாயகரமான சாலை வளைவுகள் உள்ளன. இந்த சாலை வளைவுகளில் வேகமாக வரும் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்த முயலும் போது எதிரே வரும் வாகனத்தில் மோதியும், சில நேரங்களில், சாலையோர தடுப்பு கம்பி மீதும் மோதியும் விபத்திற்குள்ளாகின்றன. இதனால், ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மேலும், பட்டரைபெரும்புதூர், நாராயணபுரம் கூட்டு சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலங்கள் உள்ளன. இந்த பாலங்கள் குறுகலாக இருப்பதால், ஒரே சமயத்தில், ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும்.

இதனால், எதிரே வரும் வாகனங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக, இவ்விரண்டு பாலங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பாலங்கள் கட்டி பல ஆண்டுகளாகி விட்டதால், அதன் ஸ்திரத்தன்மை குறைந்து விட்டது. கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், இந்த இரண்டு பாலங்களும் சேதமடைந்து விட்டன. பாலத்தின் தடுப்புச் சுவரை மட்டும் கட்டி போக்குவரத்துக்கு தகுந்தாற்போல் மாற்றப்பட்டு, வாகனங்கள் செல்கின்றன. இதனால், இந்த பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில், இரு நாட்களாக பட்டறைபெரும்புதூர், நாராயணபுரம் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள குறுகிய தரைப்பாலங்களில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடி மெதுவாக வாகனங்களை ஓட்டிச்  சென்றனர். எனவே, இந்த இரு இடங்களிலும் நடந்து வரும் மேம்பாலங்கள் கட்டும் பணியினை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED சென்னையில் அனைத்து பேருந்து...