×

காரைக்காலில் அவலம் காமராஜர் சாலையில் கரணம் தப்பினால் மரணம்

காரைக்கால், டிச 4:  கரணம் தப்பினால் மரணம் என்பது பழமொழி. குண்டும் குழியுமான காரைக்கால் காமராஜர் சாலையில் சென்றால் சறுக்கி விழுவது நிச்சயம் என்பது புதுமொழி என்று சொல்லும் அளவுக்கு அதிகமான குழிகள் இருப்பதால், உடனே சீரமைக்கவேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.காரைக்கால் மாவட்டத்தில் பிரதான சாலைகள் என்றால், பாரதியார் சாலை, நாகை-காரைக்கால் சாலை, திருநள்ளாறு சாலை, காமராஜர் சாலை என்றுதான் கூறுவார்கள். அந்த அளவுக்கு போக்குவரத்துமிக்க சாலைகளில் ஒன்றான காமராஜர் சாலையில்தான் ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் தினமும் சென்றுவருகின்றனர். அந்த சாலை முற்றிலும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக கடந்த பல மாதங்களாக நீடிப்பது வேதனையானது.
கடந்த சில மாதங்களுக்கு முன் நன்றாக இருந்த சாலையை, புதிய குடிநீர் குழாய் போடுவதற்காக, சாலையின் இருபுறமும் ஆள் உயரத்திற்கு குழி தோண்டப்பட்டது.  தோண்டப்பட்ட குழியை சாதாரண மண்ணைகொண்டே மூடிவிட்டு சென்றுவிட்டனர்.
முறையாக மூடப்படாத குழியில்  விழுந்து பலர் விபத்துக்குள்ளாகி வந்தனர். தொடர்ந்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சாலை சீரமைப்பை உடனே மேற்கொள்ளவேண்டும் என, மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியதின் பேரில், தோண்டப்பட்ட குழியின் மீது பெயருக்கு தார்ச்சாலை போடப்பட்டது.

சாலை போடும் போது, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முறையான ஆய்வு இன்றி ஏனோதானோ என  சாலை போட்டனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை பெய்ததால், சாலை முழுவதும் மரணபள்ளங்களாக காட்சி தருகிறது. ஒரு முறை இந்த சாலை வழியாக சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் சென்றுவிட்டு வந்தால் மக்களின் இன்னல் என்ன என்பது தெரியவரும். தற்போது மழையின் காரணமாக சாலை குழிகள் முழுவதும் தண்ணீர் நிரம்பி சாலை எது, குழி எது என தெரியாமல் பலர் சறுக்கி விழுந்தவண்ணம் இருக்கின்றனர்.கரணம் தப்பினால் மரணம் என்பது பழமொழி. குண்டும் குழியுமான காரைக்கால் காமராஜர் சாலையில் சென்றால் சறுக்கி விழுவது நிச்சயம் என்பது புதுமொழியாகியிருக்கிறது. உயிர்பலி ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாலையை உடனே சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்இது குறித்து  சமூக ஆர்வலர்கள் கூறுகையில், புதிய குடிநீர் போடும் திட்டம்  ரூ.50 கோடியில் தொடங்கி நடந்து வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தோண்டும் சாலையை உடனே சரிசெய்து மீண்டும் தரமான தார் சாலை அமைக்கவேண்டும் என விதிமுறைகள் உள்ளது. ஆனால் ஏனோதானோ என மெல்லிய கோடு போல தார் போட்டு மூடுவது அரசையும், மக்களையும் ஏமாற்றும் செயலாகும். புதிய குடிநீர் குழாய் அமைக்கும் திட்டத்தின் செயல்பாடு முறையாக நடைபெறுகிறதா? என சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்.காமராஜர் சாலை மட்டுமின்றி, அனைத்து பகுதிகளிலும் தோண்டப்பட்ட குழிகளை தரமான தார்சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும்.சாதாரண குழியிலேயே இவ்வளவு முறைகேடுகள் நடைபெற்றால், நாளை மேல்நிலை, கீழ்நிலை குடிநீர் தொட்டியின் தரம் கேள்விக்குறியாக மாற வாய்ப்புள்ளது. என்றார்.




Tags : KARAMAKAL ,Karanjar ,Karaikal ,road ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...