×

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்சம் மோசடி செய்த கல்லூரி பேராசிரியர் கைது

துரைப்பாக்கம்: அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 2 பேரிடம் 15 லட்சம் பணம் மோசடி செய்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
 திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் திருமலை (45). சென்னை திருவான்மியூர் பகுதியில் தங்கி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பான் கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். திருமலையும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (40), ரேணுகா தேவி (38) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சென்னை கொட்டிவாக்கம்  தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தனர்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு மணிகண்டன், ரேணுகா தேவியிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி திருமலை 15 லட்சம் பணம் பெற்றுள்ளார். இதை நம்பும் விதமாக இருவருக்கும் தலா ₹7.50 லட்சம் மதிப்பிலான 2 காசோலை வழங்கி உள்ளார்.

நாளடைவில் வேலை வாங்கி தராததால் விரக்தி அடைந்த இருவரும் திருமலையிடம், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அதற்கு திருமலை, ‘‘நான் கொடுத்த காசோலையை வங்கியில் போடுங்கள்’’ என கூறியுள்ளார்.  அதை நம்பி இருவரும் காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது அவை பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர்கள் திருவான்மியூர் காவல் நிலையத்தில் திருமலை மீது சமீபத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் திருவான்மியூர் போலீசார் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் திருமலையை விசாரித்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 15 லட்சம் ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...