×

மணலி புதுநகர் அருகே சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கனரக லாரிகளால் அடிக்கடி விபத்து : வாகன ஓட்டிகள் அவதி

திருவெற்றியூர்: மணலி புதுநகர் அருகே பொன்னேரி நெடுஞ்சாலையில் மாநகரப் பேருந்து, கன்டெய்னர் லாரி, கார், பைக் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பொன்னேரி நெடுஞ்சாலை ஆண்டார்குப்பம் அருகே சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து கன்டெய்னர், டேங்கர் லாரி மற்றும் தனியார் பேருந்துகள்  வரிசையாக நாள் கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருப்பதால் மற்ற வாகனங்கள் இந்த சர்வீஸ் சாலையில் செல்ல முடியாமல் பிரதான சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் சர்வீஸ் சாலையில் செல்ல முடியாமல் பிரதான சாலையில் செல்வதால் கனரக வாகனங்கள் மத்தியில் செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. இந்த சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “கனரக வாகனங்களை நிறுத்துவதற்காக வாகன நிறுத்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மையத்தில் நிறுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக லாரி மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இது போன்ற சர்வீஸ் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். மேலும், பழுதடைந்த லாரிகள் நாள்கணக்கில் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டு இருப்பதால் இந்த பகுதியில் குப்பை அதிகமாகி துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் சர்வீஸ் சாலையில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து உள்ள லாரிகளை அப்புறப்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

Tags : accident ,road ,Manali New Town ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!