×

அரபிக்கடலில் உருவாகிறது ‘பவன்’ புயல் லட்சத்தீவு பகுதியில் 50 விசைப்படகுகள் சிக்கியுள்ளதா? வாட்ஸ் ஆப் தகவலால் பரபரப்பு

நாகர்கோவில், டிச.4:  அரபிக்கடலில் பவன் புயல் உருவாக உள்ள நிலையில் லட்சத்தீவு பகுதியில் 50 விசைப்படகுகள் பலத்த காற்றில் சிக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.  லட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவாக உள்ள இந்த புயலுக்கு ‘பவன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயலுக்கு பெயர் சூட்டும் வரிசையில் இம்முறை இலங்கை இந்த பெயரை சூட்டியுள்ளது. நடப்பு பருவகாலத்தில் அரபிக்கடலில் உருவாகியுள்ள 4 வது புயல் இது ஆகும். மேற்கு அரபிக்கடல் பகுதியில் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 24 மணி நேரத்தில் ‘பவன்’ புயலாக மாறும் என்றும், இது சோமாலியா கடற்கரை பகுதிக்கு செல்லும் என்றும் நேற்று மாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மற்றொரு காற்றழுத்த தாழ்வுநிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கேரள கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இது வடக்கு பகுதி நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழக, கேரள பகுதிகளுக்கு பாதிப்பு இல்லை என்றும், மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை ஒருபுறம் இருக்க வங்க கடல் பகுதியில் வரும் வெள்ளிக்கிழமை மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும். இது தமிழக பகுதியில் மழையை கொடுக்கும் எனவும், வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே நாகர்கோவில் மீன்துறை உதவி இயக்குநர் மோகன்ராஜ் அனைத்து மீனவர் கூட்டுறவு சங்கம், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்களை அனைத்து பங்கு தந்தையர்களுக்கு நேற்று அனுப்பிய வானிலை எச்சரிக்கை தொடர்பான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

 தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய இந்திய பெருங்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது இன்று (நேற்று) மாலை 5.30 மணியளவில் ஏமன் நாட்டின் கடற்கரை பகுதியில் சுமார் 850 கி.மீ தொலைவிலும், சோமாலியா கடற்பகுதியில் இருந்து 120 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 72 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி சோமாலியா கடற்கரையை கடக்க கூடும். இதன் காரணமாக மன்னார் வளைகுடா, தென் தமிழகம், குமரி கடல், தென்மேற்கு வங்க கடல், லட்சத்தீவு, தென்கிழக்கு மற்றும் அதனையொட்டி கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ வேகத்துடன் கூடிய சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே லட்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் உட்பட சுமார் 50 விசைப்படகுகளில் 650 மீனவர்கள் காற்றின் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்தூர் பகுதி மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் தரப்பில் நேற்று மாலை முதல் வாட்ஸ் ஆப்பில் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Storm ,Arabian Sea ,Pawan' Storm Lakshadweep ,Watts of Information ,
× RELATED கடலில் விழுந்து காணாமல் போன மீனவரின்...