×

சோளிங்கர் தனித்தாலுகா வாக்குறுதி நிறைவேற்றுவது எப்போது?

சோளிங்கர், டிச.4:சோளிங்கரில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் அமிர்தவல்லி தாயார் சமேத யோக நரசிம்ம சுவாமி மலைக்கோயில் உள்ளது. இக்கோயில் சோளிங்கர் நகரின் அடையாளமாக திகழ்கிறது. இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க சோளிங்கரில் தற்போது சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.தேர்வுநிலை பேரூராட்சியாக உள்ள சோளிங்கர் நகராட்சிக்கு நிகராக விளங்கி வருகிறது. சோளிங்கரை சுற்றி உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினந்தோறும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும் அரசு சார்ந்த பல்வேறு பணிகளுக்காகவும் சோளிங்கர் வந்து செல்கின்றனர்.இதேபோல் சோளிங்கரில் போக்குவரத்து பணிமனை, தேசிய தரச்சான்று பெற்ற அரசு மருத்துவமனை, பதிவாளர் அலுவலகம், கருவூலம், நீதிமன்றங்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் என ஒரு தாலுகா தலை நகருக்கு உரிய அனைத்து அம்சங்களுடன் அமைந்துள்ளது.அனைத்து கட்டமைப்பு வசதிகள் கொண்ட சோளிங்கரை தலைமையிடமாக கொண்டு தாலுகா அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை.

இதனால் வாரிசு சான்று, பட்டா, சிட்டா அடங்கல் உள்ளிட்ட நிலவுடமை சான்று, சாதி சான்று, முதியோர் உதவி தொகை உட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்காகவும், அரசு அலுவல் தொடர்பாகவும் சோளிங்கரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாலாஜா, 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெமிலிக்கும் செல்லும் நிலை உள்ளது. இதனால் சான்றுகளை பெறச்செல்லும் முதியோர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும், தாலுகா அலுவலகம் செல்ல வேண்டுமென்றால் அன்றாட கூலி வேலையை விட்டு செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின் போதும் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தனி தாலுகா கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால் சோளிங்கர் தாலுகா அமைக்கப்படுவது கேள்விக்குறியாகவே உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய சோளிங்கர் எம்எல்ஏ மனோகர் கோரிக்கையை ஏற்று நெமிலி தாலுகா உருவாக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2017ல் அப்போதைய எம்எல்ஏ பார்த்தீபனின் தீவிர முயற்சியால் தாலுகா அலுவலகம் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. அந்தந்த வருவாய் கிராமங்களை உள்ளடக்கி தாலுகா அலுவலகம் அமைப்பதற்கான அனைத்து விதிமுறைகளையும் ஆராய்ந்து திட்ட எல்லை வரை படங்களுடன் அறிக்கை தயார் செய்யப்பட்டது.அதன்படி புதிய தாலுகா உருவாக்கும் பணிகளில் மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையும் குழு அமைத்து பணிகளை மேற்கொண்டனர். இதில் வாலாஜா, அரக்கோணம், காட்பாடி தாலுகாகளில் இருந்து பல்வேறு வருவாய் கிராமங்களை பிரித்து சோளிங்கரை தலைமை இடமாக கொண்டு தாலுகா உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய தாலுகா அலுவலகம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் திடீரென சோளிங்கர் தாலுகா அமைப்பது கிடப்பில் போடப்பட்டது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்எல்ஏ சம்பத்தும் சோளிங்கர் தாலுகா அலுவலகம் அமைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியானது. இந்த அறிவிப்பில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு திருப்பத்தூர் வாணியம்பாடி என 2 ஆர்டிஓ, வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம் என 2 ஆர்டிஓ, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ராணிப்பேட்டை என 2 ஆர்டிஓ என புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.சோளிங்கர் தாலுகா அமைப்பது தொடர்பான அறிவிப்பை கடந்த 28ம் தேதி நடந்த ராணிப்பேட்டை மாவட்ட துவக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என சோளிங்கர் பகுதி மக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் தாலுகா அமைப்பது தொடர்பாக எந்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடாதது மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சோளிங்கரை விட மக்கள் தொகை குறைவாக உள்ள கே.வி.குப்பம் தனித்தாலுகாவாக தொடங்கப்பட்ட நிலையில், 30 ஆண்டுகளாக சோளிங்கர் தனித்தாலுகா கோரிக்கை வைத்து வரும் நிலையில் தனித்தாலுகா அமைக்க அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருவது பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே சோளிங்கர் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sholingar ,
× RELATED சோளிங்கர் அருகே எலத்தூரில் சேதமான...