×

க.பரமத்தி பகுதியில் வலம் வந்த அரியவகை பறவைகள் திடீர் மாயம் காக்கைகளும் சேர்ந்து விடுமோ என உயிரின ஆர்வலர்கள் அச்சம்

க.பரமத்தி, டிச. 3: க.பரமத்தி ஒன்றியத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகளவில் வலம் வந்த அரியவகை பறவைகளை, தற்போது காணவில்லை.காக்கைகளும் இந்த பட்டியலில் சேர்ந்து விடும் என உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.க.பரமத்தி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமப்புற ஊர்களில் தூக்கணாங்குருவி, தைலாக்குருவி, சிட்டுக்குருவி, மைனா, கிளி, புறாக்கள் அதிகளவில் காணப்பட்டன. தற்போது சில ஆண்டுகளாக இவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. தற்போது இவற்றை பார்ப்பது மிகவும் அரிதாக உள்ளது. எல்லா பறவையினங்களுமே அழிந்து வருவதாக உயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இது குறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த வகை பறவைகள் பூச்சிகளை உண்டு உயிர் வாழ்ந்து வந்தன. விவசாயிகள் விளை நிலங்களில் பயிர் சாகுபடிக்கு ரசாயன மருந்துகளை பயன்படுத்தி அவற்றை தெளிப்பதால், இந்த மருந்துகளை சாப்பிட்ட பூச்சிகளை பறவைகள் சாப்பிட்டு விடுகின்றன. இப்படி ஏராளமான பறவைகள் இறந்து வருகின்றன.

விஷம் கலந்த இந்த உணவால், அவற்றின் இனப்பெருக்க திறனும் பாதிக்கப்பட்டு விட்டது. இது தவிர மொபைல்போன் டவர்கள் ஏற்படுத்தும் கதிர்வீச்சு இந்த பறவைகளின் முட்டைகளின் மேல் கடினத்தன்மையை ஏற்படுத்தி விட்டன. இதனால் குஞ்சுகள் வெளியே வர முடியாமல் அழிந்து விட்டன. இதே காரணங்களால் தற்போது காக்கைகளும் கூட வேகமாக அழிந்து வருகின்றன. விரைவில் காக்கைகளும் இந்த பட்டியலில் சேரும் ஆபத்து உள்ளது என்பது வருத்தமான விஷயம் என்கின்றனர்.

Tags : Bio-activists ,
× RELATED கரூர் அருகே தனியார் பள்ளியில் 3 மாணவிகளுக்கு திடீர் மூச்சு திணறல்