×

சாலைக்கிராமம் அய்யம்பட்டியில் பள்ளத்தில் சாய்ந்த பஸ் உயிர் தப்பிய பயணிகள்

இளையான்குடி, டிச. 3:  சாலைக்கிராமம் அருகே அய்யம்பட்டியில் குறுகலான சாலையில் தனியார் பஸ் பள்ளத்தில் சாய்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். சாலைக்கிராமம் அருகே அய்யம்பட்டியில் ஊராட்சிக்குட்பட்ட ஊருணி உள்ளது. இந்த ஊருணி வழியாக சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, ஆர்எஸ் மங்கலம், பரமக்குடி, இளையான்குடி ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. தவிர 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் விவசாய இடுபொருட்கள், கட்டுமான பொருட்களை இந்த ஊருணி சாலை வழியாகத்தான் வாகனங்களில் எடுத்து செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்களும் இந்த வழியாகத்தான் இயக்கப்படுகிறது. இந்த ஊருணிக்கு தடுப்புச்சுவர் இல்லை. இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் அவ்வப்போது தண்ணீர் இல்லாத சமயத்தில் ஊருணி பள்ளத்தில் பாய்ந்து லேசான காயங்களுடன் சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அய்யம்பட்டி ஊருணி நிறைந்துள்ளது. 15அடி ஆழத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த ஊருணிக்கு தடுப்புச்சுவர் எழுப்ப வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலைகளின் ஓரத்தில் கிராவல் மண் பரப்பாமல், களிமண் தரையாக இருப்பதால் பக்கவாட்டில் இறங்கும் வாகனங்கள் ஊருணிக்குள் இழுத்து  செல்லும் நிலை உள்ளது.  இப்படி ஒரு பக்கம் ஆழமான ஊருணி, மறுபக்கம் தாழ்வான பள்ளம் என பல ஆண்டுகளாக வாகனஓட்டிகளை மிரட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வந்த தனியார் பஸ், குறுகலான சாலையால் பள்ளத்தில் இறங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அலறியபடி கூச்சலிட்டனர். சுதாரித்த டிரைவர் முருகன், கண்டக்டர் அழகர்  பஸ்சில் இருந்தவர்களை அப்பகுதி மக்களின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றினர். பின் ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் உதவியுடன் சாய்ந்த நிலையிலிருந்த பஸ்சை மீட்டனர். டிரைவரின் முயற்சியால் அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு அய்யம்பட்டி ஊரணியை சுற்றிலும் தடுப்புச்சுவருடன், சாலையை அகலப்படுத்த  மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து டிரைவர் ராமச்சந்திரன் கூறியதாவது, ‘இந்த சாலையின் ஒரு பக்கம் ஆழமுள்ள ஊருணி, மறுபக்கம் தாழ்வான பள்ளம். வாகனங்கள் தடுமாறினால் விபத்துதான். இதுவரை சிறு விபத்துகள் மட்டும் நடந்துள்ளது. பெரிய விபத்து நடக்காதவாறு  தடுப்புச்சுவர், அகலமான சாலை அமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Passengers ,Ayyampatti ,
× RELATED சேலம் – கொச்சி விமானம் திடீர் ரத்து: 50...