×

கழிவுநீர் கால்வாய் இல்லாமல் தேங்கி நிற்கும் தண்ணீரால் நோய் அச்சம்

திருவாடானை, டிச.3: திருவாடானை அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால், மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். திருவாடானை அருகே உள்ள பாரதி நகரில் 9 வீதிகள் உள்ளன. இதில் 300க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நகர் பகுதி போன்று வீதிகள் இருந்தபோதிலும் கழிவுநீர் வெளியேற கால்வாய்கள் அமைக்கப்பட வில்லை. இதனால் சாக்கடை நீர் மற்றும் மழை தண்ணீர் வெளியேறவும் வடிகால் வசதி இல்லாமல் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர். தெருவில் தண்ணீர் பல நாட்கள் தேங்கி கிடப்பதால், சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த 9 வீதிகளிலும் இரண்டு பக்கமும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்களின் மீது ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் அக்கறை இல்லாமல் செயல்படுகின்றனர். மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. இந்நிலையில் எங்கள் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரால், நோய் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்கிய பின்பு தான் சுகாதார அதிகாரிகள் வருவார்களா? மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத விட்டால் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை வரும் என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை