×

மேலூர் அருகே மண்டபத்தில் தஞ்சமடைந்த கிராம மக்களிடம் அதிகாரிகள் கணக்கெடுப்பு

மேலூர், டிச. 3: மேலூர் பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகள் சேதமாகி மழை நீர் முழுவதும் வீட்டிற்குள் ஒழுகியதால், வீட்டை விட்டு வெளியேறி சொந்த கிராமத்திலேயே அகதிகள் போல் கிராம மக்கள் தங்கி இருந்த செய்தி தினகரனில் வெளியானதை தொடர்ந்து நேற்று அதிகாரிகள் அங்கு முகாமிட்டு ஆய்வு செய்தனர். மேலூர் அருகே அலங்கம்பட்டியில் உள்ளது இந்திரா காலனி. இங்கு 25 வருடங்களுக்கு முன்பு 30க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டிருந்தது. இந்த வீடுகள் சேதமாகி மேற்கூரைகள் உதிர்ந்து அவ்வப்போது விழுந்து குடியிருப்பு வாசிகளை காயப்படுத்தி வந்தது. தற்போது இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் இந்த தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து மழை நீர் வீடு முழுவதும் ஒழுகி வீட்டில் தங்க முடியாமல் போனது. இதனால் தங்கள் குழந்தை குட்டிகளுடன் இந்திரா காலனியை சேர்ந்த மக்கள் அப்பகுதியில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு கட்டிடத்தில் நேற்று முன்தினம் குடியேறினர். இது குறித்து நேற்றைய ‘தினகரனில்’ சொந்த ஊரிலேயே அகதிகள் போல் மண்டபத்தில் தஞ்சமடைந்த மக்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து நேற்று மதுரை சப் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அழகேசன், கொட்டாம்பட்டி பிடிஓ பாலச்சந்திரன் உட்பட ஏராளமான அதிகாரிகள் அலங்கம்பட்டியில் குவிந்தனர். பின்னர் அங்குள்ள ஒவ்வொரு தொகுப்பு வீடாக சென்று பார்வையிட்டனர். அவர்களிடம் அந்த வீட்டிற்கான பட்டா உள்ளதா என சோதனையிட்டனர். வீடுகளின் சேதம் குறித்து கலெக்டரிடம் கூறப்படும் என்றும், அதன் பிறகே அந்த வீடுகளை மராமத்து பார்ப்பதா ? அல்லது முற்றிலும் இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டுவதா ? என முடிவு செய்யப்படும் என மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Melur ,hall ,
× RELATED கோடையிலும் தண்ணீர் நிரம்பிய கிணறு